திமுக பவர் எஞ்சின் முன் அதிமுக டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 என தலா 5000 ரூபாயை 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தல் பயத்தால் தான் ஆளும் கட்சி இதனை செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
நேற்று (பிப்ரவரி 22) ஆவடி, அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “73 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இல்லாத அளவு, கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாகத் தகுதியுள்ள பல பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை சென்று சேரவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் தலா ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தேன். அதற்குப் பயந்துதான் ஸ்டாலின் தற்போது உரிமைத் தொகையை வழங்கியிருக்கிறார்.
இந்த பணம் முதல்வர் ஸ்டாலின் தனது குடும்ப அறக்கட்டளையில் இருந்து வழங்கவில்லை. மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்குகிறார்.
திமுக குடும்பத்திலிருந்து ஹவாலா பணம் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் அந்த பணம் மீண்டும் கொண்டு வரப்பட்டு, தமிழக மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடித்து கொடுத்துள்ள முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டலைன், “திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது ‘பூமராங்’ ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்!
அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. “உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!” இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன்.
பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே திராவிட மாடல் சத்தமில்லாமல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன்.
காப்பி, பேஸ்ட் அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க!
விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என திராவிட மாடல் அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற திமுக மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் DMKWomenPowerEngine முன் உங்கள் டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது” என்று தனது எக்ஸ் பக்கம் மூலம் விமர்சித்துள்ளார்.
