டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முகத்தை கர்சீப்பால் மறைத்ததாக செய்தி வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் நிரஞ்சனுக்கு அதிமுக, நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதிமுகவின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நடந்தது என்ன?
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த உடனேயே, எடப்பாடி பழனிசாமி தமது முகத்தை கர்சீப்பால் மூடியபடியே காரில் ஏறி பயணித்தார் என அமித்ஷா வீடு முன்பாக இருந்து செய்தி வெளியிட்டார் சுதந்திர பத்திரிகையாளர் நிரஞ்சன். இதேபோல அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

அதிமுக நோட்டீஸ்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக நிரஞ்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதிமுக.
பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
அதிமுகவின் இந்த நோட்டீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், “டெல்லியில் வசிக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் பல்வேறு முன்னணி தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது “தி கேபிடல்” என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், பல்வேறு ஊடகங்களுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்திகளையும் வழங்கிவருகிறார்.
இந்நிலையில், 16.09.25 அன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்த நிகழ்வு குறித்து நிரஞ்சன் குமார் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, சந்திப்பை முடித்துவிட்டு காரில் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை கைகுட்டையால் முடியிருந்தது குறித்த செய்தியை வீடியோ ஆதரத்துடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்தி அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
அதிமுக தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைகுட்டையால் முகத்தை துடைத்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கமும் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது.
இந்த செய்தியை வெளியிட்டதற்காக அதிமுக சார்பாக திரு.நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிமுக சமூக வலைதளப் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் தலையும் இல்லாத, வாலும் இல்லாத அந்த மொட்டை கடிதமும் அத்துடன் பகிரப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், நிரஞ்சன் குமார் அவர்களுக்கு எதிராக, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை மிகவும் தவறாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், நிரஞ்சன் குமாரை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு எதிராக அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நிரஞ்சன் விளக்கம்
நிரஞ்சன் விளக்கம்: என் அன்பு பத்திரிக்கை தோழர்களுக்கு எனது நன்றி! எங்கோ தூரத்தில் இருக்கும் எனக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த குரல் மிகப்பெரியது.
இதில் குறி வைக்கப்படுவது நான் மட்டும் இல்லை, சுயாதீன பத்திரிக்கையாளர்கள் என்னும் independent journalist அனைவரும் தான் என உணர்கிறேன் . இந்த அடக்கு முறை அப்படியே அனைத்து பத்திரிக்கையாளர்களுக்குமானதாக மாறும் என்பதையும் யூகிக்கிறேன்.
காரணம் நடந்ததை அப்படியே சொல்லியிருக்கிறேன். காரணம் அதை களத்தில் நின்று சாட்சியாக பதிவு செய்திருக்கிறேன்.
என்னோடு மற்ற ஊடக நிறுவன தோழர்களும் இருந்தார்கள், செய்தி வெளியிட்டார்கள். ஆனால் குறி வைக்கப்படுவது என்னவோ தனி நபரான என்னை தான். காரணம் எனக்கான ஆள் பலம், பண பலம் எதுவும் இல்லை என்பதால்.
நானும் எனதளவில் தயாராக இருந்தேன் . எக்காரணம் கொண்டும் என் செய்தியில் பின் வாங்க போவதில்லை என்ற நிலையில் உறுதியாக இருந்தேன்.
தனியாக போராட்டத்திற்கு தயாராகி வந்த போது நமது
@MadrasJournos சங்கத்தின் ஆதரவு குரல் எனக்குமிகப்பெரும் ஊக்கத்தை அளிக்கிறது.
என் உவகையை கூற வார்த்தை இன்றி நிற்கிறேன். நன்றி தோழர்களே. வாழ்க பத்திரிக்கை சுதந்திரம், வாழ்க கருத்து சுதந்திரம். பாரபட்சமற்ற என பத்திரிக்கை பணி தொடரும். இவ்வாறு நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.