ADVERTISEMENT

சர்ச்சைக்குரிய பிஎம்ஶ்ரீ திட்டம்: கேரளா பின்வாங்கியது- தமிழகம் உறுதியாக நிற்பது ஏன்?

Published On:

| By Mathi

Tamil Nadu Kerala PM SHRI Scheme

மத்திய அரசின் “பிஎம்ஶ்ரீ” (Prime Minister’s Schools for Rising India பிரதம மந்திரி பள்ளிகள் எழுச்சி இந்தியா) திட்டம், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கான முன்மாதிரிப் பள்ளிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டாலும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவ உரிமை குறித்த பெரும் விவாதத்தை நாடு முழுவதும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, கேரளா அரசு,புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே அதில் இருந்து விலகி, ஆய்வுக் குழுவை அமைத்திருப்பதும், தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து, நிதி நிறுத்தம், உச்ச நீதிமன்ற வழக்கு என சட்டப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதும் இத்திட்டத்தின் மீதான அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பிஎம்ஶ்ரீ திட்டம்

ADVERTISEMENT

2022-ம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று தொடங்கப்பட்ட பிஎம்ஶ்ரீ திட்டம், நாடு முழுவதும் உள்ள சுமார் 14,500 மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அமலாக்கத்திற்கான முன்மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பள்ளிகள், நவீன உள்கட்டமைப்புடன், ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், புத்தாக்கக் கவுன்சில்கள் போன்ற வசதிகளைக் கொண்டு, மாணவர்களுக்கு உயர்தர, உள்ளடக்கிய மற்றும் அனுபவமிக்க கற்றலை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பல மொழிகளில் கற்றலை ஊக்குவித்தல், மனப்பாடக் கல்வியைக் குறைத்தல் மற்றும் 21ஆம் நூற்றாண்டுத் திறன்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

இத்திட்டத்திற்கான நிதிப் பகிர்வு, சாதாரண மாநிலங்களுக்கு மத்திய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% என்ற விகிதத்திலும், வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு மத்திய அரசு 90% மற்றும் மாநில அரசு 10% என்ற விகிதத்திலும் அமையும். இத்திட்டத்தில் பங்கேற்க, மாநிலங்கள் மத்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட வேண்டும். இது NEP 2020 இன் அனைத்து விதிகளையும் முழுமையாகச் செயல்படுத்த மாநிலங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

கேரளாவின் திடீர் பின்வாங்கல்

ஆரம்பத்தில் சித்தாந்தக் காரணங்களுக்காக பிஎம்ஶ்ரீ திட்டத்தை எதிர்த்து வந்த கேரளா அரசு, அக்டோபர் 24 அன்று மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 1,150 கோடி ரூபாய் நிதியைப் பெறுவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. இத்திட்டத்தில் சேராததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய கல்வி நிதி நிறுத்தப்பட்டிருந்தது கேரள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இருப்பினும், இந்த முடிவு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து (CPI) கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. மாநிலத்தின் சுயாட்சிக்கு இது சவால் என்றும், தேசிய கல்விக் கொள்கையின் பிற்போக்கு அம்சங்களை ஏற்றுக் கொள்வதற்கு சமம் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த உள்முரண்பாடுகளைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், திட்ட அமலாக்கத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாகவும், திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தலைமையில் ஏழு பேர் கொண்ட அமைச்சரவைக் துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அக்டோபர் 29, 2025 அன்று அறிவித்தார்.

ADVERTISEMENT

தமிழகத்தின் உறுதியான எதிர்ப்பு: நிதி நெருக்கடி மற்றும் சட்டப் போராட்டம்

கேரளாவின் நிலைப்பாட்டுக்க்கு மாறாக, தமிழ்நாடு அரசு, பிஎம்ஶ்ரீ திட்டத்திற்குத் தொடர்ந்து உறுதியான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்படும் மும்மொழிக் கொள்கை, மத்திய அரசின் தலையீடு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான போக்குகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. “பி.எம்.ஶ்ரீ” என்ற பெயர் மத்திய அரசின் திட்டமாகத் தோற்றமளிப்பதும், மாநில அரசின் நிதியுடன் மத்திய அரசின் பெயரை இடுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் தமிழக அரசு வாதிடுகிறது.

இத்திட்டத்தில் இணையாததால், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி மற்றும் 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதி என சுமார் ₹2,152 கோடி நிதி மத்திய அரசால் தமிழகத்திற்கு நிறுத்தப்பட்டது. இந்த நிதி நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, மத்திய அரசு முதற்கட்டமாக ₹538.39 கோடி நிதியை விடுவித்தது. இருப்பினும், மத்திய அரசு முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், மாநில அரசின் கல்வி மாதிரிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது.

மேற்கு வங்கமும் பிற மாநிலங்களும்

தமிழ்நாட்டைப் போலவே, மேற்கு வங்காளமும் பிஎம்ஶ்ரீ திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது. திட்டத்தின் பெயர் மற்றும் பிராண்டிங் அரசியல் சார்ந்தது என்று மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி நிறுத்தி வைக்கப்பட்டதால், கடந்த ஆண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டன. கர்நாடகா, தெலுங்கானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.

கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்ற பொதுவான கருத்து இருந்தாலும், தேசிய கல்விக் கொள்கையின் அமலாக்கம், மாநில உரிமைகள் மற்றும் மத்திய – மாநில உறவுகளில் பிஎம்ஶ்ரீ திட்டம் ஒரு முக்கியமான சோதனைக்களமாக மாறியுள்ளது. கேரளா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதால், இனிவரும் காலங்களில் மற்ற மாநிலங்களின் நிலைப்பாட்டிலும், இத்திட்டத்தின் எதிர்காலத்திலும் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share