சமீப நாட்களாக தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
அந்தவகையில் இன்று (நவம்பர் 12) அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இன்று காலை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வழியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது வீடிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அவை வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மிரட்டல் குறித்து தகவல் கிடைத்தவுடன், உடனடியாக வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் வீடு, அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கார், வீட்டில் உள்ள அனைத்து அறைகள் என சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அந்த தகவல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுபோன்று சென்னையில் உள்ள அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
பாடகி சின்மயி வீடு, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரது வீடுகளுக்கும் மிரட்டல் வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. திருச்சி என்ஐடி மகளிர் விடுதியிலும் சோதனை நடத்தினர். ஆனால் இந்த தகவல் அனைத்து புரளி என்பது சோதனை முடிவில் தெரியவந்தது.
இப்படி தமிழ்நாட்டில் பல இடங்களில் இன்று காலை சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று பிற்பகல், சென்னை விமான நிலையம் மற்றும் விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
மும்பையில் இருந்து வாரணாசிக்கு 176 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு மிரட்டல் வந்த நிலையில், வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதுபோன்று இண்டிகோ விமான நிறுவத்தின் குறைதீர்க்கும் மையத்திற்கு வந்த மின்னஞ்சலில் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 5 முக்கிய விமான நிலையங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் அஜித் குமார் உள்ளிட்டோரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலஆளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மட்டும் 15 முறைக்கும் மேல் இதுபோன்று மிரட்டல்கள் வந்துள்ளன.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கு இதுபோன்ற வதந்தி மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் டார் (Tor) மற்றும் விபிஎன் (VPN) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதால், குற்றவாளிகளின் ஐ.பி. முகவரியைக் (IP address) கண்டுபிடித்து துப்பு துலக்குவதில் தொடர்ந்து சிரமம் ஏற்படுவதாகவும், எனினும் விரைவில் இப்படி வதந்தி மெயில்களை அனுப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை கூறுகிறது.
