வெறி பிடித்தது போல வெடிகுண்டு மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கிறார் அல்லது கொண்டிருக்கிறார்கள் , வெடிகுண்டு ஆசாமி அல்லது ஆசாமிகள் .
அரசியல் தலைவர்கள், சினிமா ஸ்டார்கள் என்று பல்துறைப் பிரபலங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், இப்போது தனி ஆட்களுக்கு மட்டும் இல்லாமல் கும்பல்களை நோக்கியும் நகர்கிறது . அதாவது மாஸ் மிரட்டல்.
முதன் முதலாக சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது .
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ளது தனியாருக்கு சொந்தமான வேல்ஸ் பிலிம் சிட்டி.
இங்கு பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்காக செட் அமைத்து படப்பிடிப்பு நடத்துவது மற்றும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரங்குகள் அமைத்து தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த பிலிம் சிட்டியில் வெடிகுண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மெயிலின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அடிப்படையின் பேரில் நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி வெடிகுண்டு நிபுணர்கள் போய் சென்று சோதனை மேற்கொண்டனர்.. பிலிம் சிட்டிக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்திலும் தீவிர சோதனை நடந்தது.
இதில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை . ( மிரட்டும் ஆட்களிடம்தான் மக்கள் சிக்கி இருக்கிறார்கள்!) இது வெடிகுண்டு புரளி என்று போலீஸ் சொன்னாலும் அதற்குள் அங்கிருந்த பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது.
கலாச்சார சீரழிவாக நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராடிய சமயம் பார்த்து (அது வேறு பிலிம் சிட்டி ) இங்கே இது நடந்திருப்பதால் புரளி கிளப்பும் அந்த நபர் அரசியல்வாதியால் பாதிக்கப்பட்டவரா என்று தெரியவில்லை.
அஜித் வீடு முதல் பிலிம் சிட்டி வரை மிரட்டல் வருவதால் அவர் ரிலீஸ் ஆகும் பாடாவதி படங்களால் பாதிக்கப்பட்டவரா/ பாதிக்கப்பட்டவர்களா என்றும் தெரியவில்லை.
ஏப்ரல் மாதம் துவங்கி இன்றுவரை 342 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருக்கின்றன.
டெல்லி குண்டு வெடிப்பு நடந்திருக்கும் நிலையில் எதையுமே அலட்சியமாக விட முடியாத நிலை.
அடுத்தடுத்து இவ்வளவு வெடிகுண்டு மிரட்டல்கள் , பாகுபலி படத்து அம்பு மழை போல வந்தும் குற்றவாளி அல்லது குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியல என்றால் டெக்னாலஜி யார் கையில் இருக்கிறது ?
— ராஜ திருமகன்
