நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை தாம் சந்தித்தது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்தை சந்தித்தது ஏன்?
சென்னையில் இன்று (செப்டம்பர் 23) செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் என் குரு.. தலைவர்.. அவரை நான் மாதத்துக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். ரஜினிகாந்துடன் யோகா மற்றும் ஆன்மீகம் தொடர்பாக மட்டுமே பேசுவேன். அரசியலோடு இதனை முடித்து போட்டுவிட வேண்டாம். (நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த 15-ந் தேதி ரஜினிகாந்தை அண்ணாமலை சந்தித்து தனிக்கட்சி தொடங்குவது பற்றி பேசியதையும் ரஜினி அதனை விரும்பவில்லை எனவும் பதிவு செய்திருந்தோம்).
டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்?
டிடிவி தினகரனை நான் சந்தித்து பேசியது உண்மைதான். அது வெளிப்படையான சந்திப்புதான். திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்; பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிய முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான் கேட்டுக் கொண்டேன்
டிடிவி தினகரனுக்காக டிசம்பர் வரை காத்திருப்பு
2024-ம் ஆண்டே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதனால் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசினேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமமுக மீண்டும் வர வேண்டும் என வலியுறுத்தினேன். டிடிவி தினகரனின் முடிவுக்காக டிசம்பர் மாதம் வரை காத்திருப்பேன்.
டிடிவி தினகரனை காயப்படுத்த கூடாது
நம்மை நம்பி 2024-ம் ஆண்டே கூட்டணிக்கு வந்தவர் டிடிவி தினகரன். அவர்களை எல்லாம் காயப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல ஓபிஎஸ்ஸையும் விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.