இருவர் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொண்டு பின்னர் தகராறு வந்தால் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண், தன்னுடன் பல ஆண்டுகளாக பழகி உறவு வைத்துக்கொண்டு பின் திருமணம் செய்ய மறுப்பதாக அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு வந்தபோது, ‘தனிப்பட்ட உறவு தகராறில் குற்றவியல் சட்டம் பயன்படுத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. இதனை சரிப்பார்க்க வேண்டும். இருவர் சம்மதத்துடன் உறவு கொள்ளப்பட்டு பின்னர் பிரச்சினை வந்தால் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த முடியாது.
தனிப்பட்ட அல்லது உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது.
வற்புறுத்தல், ஏமாற்றுதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடும்.
இருவர் சம்மதத்துடன் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவிட்டு தகராறு வந்தவுடன் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவதா?
தனிப்பட்ட முரண்பாட்டை தவறான நடத்தை என்று சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும், வழக்கு தொடர்ந்த இளைஞரும் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிமன்றம், இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
