திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.காளிப்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.
இதையொட்டி மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி பழனிசாமி, 108 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வை பானையில் பச்சரிசி இட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இது ஒரு “வெற்றிக் கூட்டணி”. மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதைத் தடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.
திமுக அரசை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு நிரந்தர டிஜிபியை (DGP) கூட நியமிக்க முடியாத நிலையில் இந்த ஆட்சி இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசிய அவர், “திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? நிலைக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிடமிருந்து காங்கிரஸ் கைநழுவி போகும் நிலையில் உள்ளது. இன்றைக்கு அதுதான் பத்திரிகை செய்தி. ஆனால் அதிமுக பலமான கூட்டணி. மீண்டும் ஆட்சி அமைப்போம்” என்று பேசினார்.
