காலவரையற்ற உண்ணாவிரதம் : மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில்… எப்படி இருக்கிறார்?

Published On:

| By christopher

congress mp Sasikanth Senthil admitted in hospital

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று (ஆகஸ்ட் 30) 2வது நாளாக மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு சமக்ர சிக்‌ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் கிடைக்கவேண்டிய நடப்பாண்டுக்கான (2024-25) ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT

இதனை கண்டித்தும், நிதியை உடனடியாக விடுவிக்க கோரியும் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், தனது அலுவலகத்தில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இன்று இரண்டாவது நாளை எட்டிய நிலையில், காலையில் அவரை பரிசோதித்த மருத்துவக்குழுவினர் அவருக்கு ரத்தம் அழுத்தம் குறைந்ததை கண்டறிந்த்து ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினர்.

ADVERTISEMENT

காலையில் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி போராட்டாத்திற்கு ஆதரவு தெரிவித்தார். உடல்நிலையையும் கருத்தில் கொள்ள அறிவுறுத்தினார்.

அதன்பின்னர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

எனினும் மாலையில் அவருக்கு ரத்தம் அழுத்தம் அதிகரித்ததை தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இரவு 10.30 மணியளவில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “SSA-வின் கீழ் தமிழ்நாட்டின் உரிமையான நிதியைக் கோரி, எனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, உயர் இரத்த அழுத்தத்தால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. நான் தற்போது நன்றாக இருக்கிறேன்” என சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

அவரது போராட்டத்திற்கு தமிழ்நாட்டைத் தாண்டியும் அரசியல் கட்சியினர் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்களின் ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share