தம்மை ஆபாசமாக, அவதூறாக பேசிய கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதனை போலீசார் கைது செய்யாததற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் இன்று பிப்ரவரி 23 ஜோதிமணி எம்.பி. கூறியதாவது: கரூரில் பொதுவெளியில் ஆபாசமாகவும், அறுவெறுப்பாகவும் , கண்ணியத்தை சிதைக்கும் வகையிலும் பேசிய குற்றவாளி பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை.
ஒரு பெண்ணை ,ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை, பொதுவெளியில் ஆபாசமாகவும்,அறுவெறுக்கத்தக்க வகையிலும் பேசிய பாஜக மாவட்ட தலைவர் திரு. செந்தில் நாதன் மீது புகார் கொடுக்கபட்டு,வழக்குப் பதிவு செய்து ஒன்பது நாட்கள் ஆகியும் இன்னும் கைதுசெய்யப்பட வில்லை.
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கொடுத்த புகாரைப் பெற்றுக்கொண்டு,உடனடியாக உரிய பிரிவுகளில் கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த தீவிரம் இப்பொழுது இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
என்னால் பொதுவெளியில் பகிரப்பட்ட அந்த வீடியோவைப் பார்த்து தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள், சமூக செயல் பாட்டாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து காவல்துறை உடனடியாக குற்றவாளியை கைதுசெய்ய வேண்டும். என்று வலியுறுத்தி இருந்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கங்களால டிஜிபி அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பொதுவாக சிறப்பாகச் செயல்படக்கூடியது என்று பெயர் பெற்ற தமிழ்நாடு காவல்துறை இவ்வழக்கில் காட்டுகிற சுணக்கம் ஏற்புடையதல்ல.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடைபெறும் ஆபாசத்தாக்குதலுக்கே குற்றவாளி கைது செய்யப்படவில்லையென்றால், எவ்வித அரசியல்,பொருளாதார பின்னணியும் இல்லாத எளிய பெண்களின் புகார்கள் என்னவாகும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
பெண்களின்அறிவு,கண்ணியம், கல்வி, உழைப்பு, திறமை, அனுபவம்- துணிச்சல் ,நேர்மை மன உறுதி இவையெல்லாம் ஒன்றுமேயில்லை. வீட்டைவிட்டு பொதுவெளிக்கு வந்து தனது கனவுகளைப் பின் தொடரும் பெண் என்றாலே வெறும் உடலாகவும், ஆபாசமாகவும், கண்ணியத்தை சிதைக்கும் வகையிலும் பேசலாம். பேசிவிட்டு அதிலிருந்து அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து தப்பித்துவிடலாம் என்கிற மனநிலையை எளிதாகக் கடந்து போய்விட முடியாது.
இன்று நான் கடந்து போனால் நாளை இது இன்னொரு சகோதரிக்கு நடக்கும். இதற்கு யாராவது ஒருவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..அது நானாக இருக்கட்டும்.இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் வரை நான் போராடுவேன். இது எனக்காக மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்ணிற்காகவும் நாம் நடத்துகிற யுத்தமாக இது இருக்கும். அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் நானே வாதாடுவேன்.அது மற்ற பெண்களுக்கும் ஒரு நம்பிக்கையை அளிக்கட்டும்.
கரூர் மாவட்ட காவல்துறை எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் பணியாமல் தனது கடமையை சரியாகச் செய்ய வேண்டும்.. விரைந்து செயல்பட்டு உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு ஜோதிமணி எம்.பி. கூறினார்.
இதனிடையே கரூர் பாஜக தலைவர் செந்தில்நாதனை கைது செய்யக் கோரி சென்னையில் காங்கிரஸ் மகளிரணியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
