ADVERTISEMENT

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு: இன்று பகல் இறுதி சடங்குகள்- தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி!

Published On:

| By Mathi

Robo Shankar New

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இன்று பிற்பகலில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர், தீபாவளி திரைப்படத்தில் மூலம் வெள்ளித் திரை உலகில் இணைந்தார். மாரி, விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் ரோபோ சங்கர்.

ADVERTISEMENT

அவர் நாயகனாக நடித்த அம்பி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மஞ்சள் காமாலை நோயால் ரோபோ சங்கரின் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் உடல் நலன் தேறிய நிலையில் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் ரோபோ சங்கர் உடல்நலன் மீண்டும் பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (செப்டம்பர் 18) காலமானார்.

ADVERTISEMENT

ரோபோ சங்கர் மறைவு செய்தி கேட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். திரை உலகத்தினர் பெருந்திரளாக ரோபோ சங்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரோபோ சங்கர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ரோபோ சங்கரின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல்:

ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share