மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 11 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து ‘கோல்ட்ரிஃப்’ இருமல் சிரப்புக்கு இன்று (அக்டோபர் 4) முதல் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தில் 9 மற்றும் ராஜஸ்தானில் 2 என மொத்தம் 11 குழந்தைகள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு அவர்கள் உட்கொண்ட ’கோல்ட்ரிஃப்’ இருமல் சிரப் காரணமா என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் ’இருமல் சிரப்புகளில் பிரேக் ஆயில் கரைப்பான் கலந்ததே’ காரணம் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
11 குழந்தைகளின் உயிரிழப்பைக் கவனத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், “2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது” என்று என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பு தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பர்மா என்ற மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் நடத்திய ஆய்வில், “காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் அதகளவில் டைஎதிலீன் கிளைக்கால்’ என்ற ரசாயனம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கோல்ட் ரிஃப் இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் முடிவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.