கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜிடி நாயுடுவின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 10 ) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
முன்னதாக தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தமிழ்நாடு தந்த அறிவியல் மாமேதைகளில் ஒருவரும், இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவரும், கல்வியாளராகவும், எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவராகவும் விளங்கிய ஜி.டி நாயுடுவுக்கு கோவையில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து கோவை மாவட்டம் வஉசி மைதானத்தில் ஜிடி நாயுடு சிலை அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ஜிடி நாயுடுவின் முழு உருவ சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜிடி நாயுடுவின் குடும்பத்தினர் மற்றும் கோவை மாநாகராட்சி மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள மேம்பாலத்திற்கு “ஜி.டி. நாயுடு மேம்பாலம்” என பெயரிடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்ட நிலையில் இன்று வஉசி மைதானத்தில் அவரது முழு உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
