ராஜன் குறை
மானுட வரலாறு கண்ட அரிய தத்துவ மேதை கார்ல் மார்க்ஸுக்கு சிந்தையைக் கவரும் எழுச்சிமிகு சிலையொன்றை சென்னையில் கன்னிமாரா நூலகத்தின் முன்னே திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அது வெறும் சிலையல்ல. மானுட விடுதலைத் தத்துவத்தின் உருவகம். மார்க்ஸ் ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்தவர் ஆனாலும் அவரது மாந்த விடுதலைச் சிந்தனை உலகளாவியது என்பதால் மானுடப் பொதுச் சொத்தாக மாறியவர்.
இருபத்தோராம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டு அரசு அவருக்கு சிலையெடுத்திருப்பது என்றென்றும் அவர் தத்துவம் உயிர்வாழும் என்பதற்கான அறிகுறியேயாகும். அது மட்டுமல்ல. தன்னுடைய மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் வெறும் வாக்கு ஈர்க்கும் உத்திகளல்ல, அவற்றின் பின்னால் ஆழ்ந்த கருத்தியல் சிந்தனை உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பல்வேறு இட துசாரி சிந்தானையாளர்கள், செயல்பாட்டாளர்கள் கொண்ட மார்க்ஸ் சிலையமைப்புக் குழுவினரின், பொதுவுடமைக் கட்சியினரின் கோரிக்கையை ஏற்ற முதல்வரின் மார்க்ஸ் சிலையெடுப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதனை மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்தி உயிரோட்டமுள்ள சிலையாக நிறுவியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கல்கத்தாவைத் தவிர வேறு எந்த மாநில தலைநகரிலும் அரசே மார்க்ஸிற்கு சிலையெடுத்திருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் அது நிகழ ஒரு வரலாற்றுப் பின்புலம் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நவீன வரலாற்றை தன் ஓய்வறியா களப்பணியால் வடிவமைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சோவியத் ரஷ்யாவிற்கு 1932-ஆம் ஆண்டு பயணம் செய்ததும், அங்கு உருவாகியிருந்த பொதுவுடமைச் சமூகத்தை வியந்து நோக்கியதும், தமிழ்நாடு திரும்பியதும் தன்னுடைய சுயமரியாதை இயக்கத்தை “சுயமரியாதை, சமதர்ம” இயக்கமென்று அறிவித்ததும் வரலாறு. அன்றே கார்ல் மார்க்ஸ் தமிழ்நாட்டு வரலாற்றில், அதன் ஆன்மாவில் இரண்டறக் கலந்துவிட்டார் என்றும் கூறலாம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான சிங்காரவேலர் பெரியாருடன் அவ்வாண்டுகளில் இணைந்து பணியாற்றி வந்தார். குடியரசு ஏட்டிலும், பிற இதழ்களிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். பல்வேறு காரணங்களால் அரசியல் இயக்கங்களின் பாதைகள் பிரிந்தாலும், விழுமியங்கள் என்றைக்குமே அவற்றின் இலட்சியங்களை இணைக்கும் தன்மையன என்பதை நாம் புரிந்துகொண்டால்தான் இந்த சிலை திறப்பின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

கார்ல் மார்க்ஸின் தத்துவம்
மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1818 முதல் 1883 வரை நவீன தேசிய அரசுகளும், தொழிற்புரட்சியும் வலுப்பெற்ற காலத்திலே பிறந்து வாழ்ந்தவர். அவரது சிந்தனைகள் குறித்து ஏராளமான நூல்கள் உலகம் முழுவதும் எழுதப் பெற்றுள்ளன. அவற்றை எப்படி சுருக்கிப் புரிந்துகொள்ள முயன்றாலும் போதாமையாகத்தான் இருக்கும் என்றாலும், உடனடியாக நாம் அவரது முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு சில அம்சங்களைக் குறிப்பிட வேண்டும்.
மானுடத்தின் முக்கியமான ஆற்றல் என்பது இயற்கையிலிருந்து தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள தேவையான பண்டங்களை உருவாக்கிக்கொள்வதுதான். அதுவே அவர்களை இயற்கைக்கு முற்றிலும் கட்டுப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெற்று தங்கள் வாழ்வை வடிவமைத்துக்கொள்ள வழி வகுக்கிறது. உதாரணமாக கடுமையான மழை பெய்தால் குகைகளை நோக்கி ஓடாமல், வீடுகளையும், கூரைகளையும் அமைத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
மனிதர்களால் இயற்கையை முற்றாக அறிய முடியுமா, வெல்ல முடியுமா என்பதெல்லாம் விவாதத்திற்குரியவை என்றாலும், நிச்சயம் பகுத்தறிவால் இயற்கை தங்களுக்கு வழங்கும் சாத்தியங்களை உணர்ந்துகொண்டு, அறிந்து அவற்றைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியும். கடந்த முன்னூறு வருடங்களில் மானுடம் வாழ்வை எவ்வளவோ மேம்படுத்திக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
இந்த மானுடவியல் அடிப்படையில் ஒரு பண்டம் தனக்கு எந்த அளவு தேவை என்பதைப் பொறுத்துதான் மனிதர்கள் அதற்கான உழைப்பை செலவிடுவார்கள் என்பது இயற்கை. எனவே ஒரு பொருளின் பயன்மதிப்பு என்பது அதை உருவாக்கத் தேவையான உழைப்பின் மதிப்பே எனலாம். ஆனால், பண்டங்களை பரிமாறிக் கொள்ளும்போது சந்தையில் பொருட்களுக்கு மற்றொரு மதிப்பு உருவாகிறது. அது அதன் பரிமாற்ற மதிப்பாகிறது. பரிமாற்ற மதிப்பு, பயன் மதிப்பைவிட அதிகம் இருக்கும்போது அது உபரி மதிப்பாகிறது.
இந்த உபரி மதிப்பு பணம் என்ற வடிவில் மேலும் பண்டங்களை உற்பத்தி செய்ய முதலீடாக மாறும்போது, அது தன்னைத் தானே பெருக்கிக்கொள்ள முயல்கிறது. முதலில் பணம் என்பது பண்டங்களை பரிமாறிக்கொள்ள உதவும் பொருட்டுதான் உருவாகிறது. பின்னர் அது தன்னையே பெருக்கிக்கொள்ளும் வடிவெடுக்கிறது. இதனை மூன்று நிலைகளில் மாற்றமடைவதாகக் காண்பித்தார் மார்க்ஸ்.
பண்டம் – பணம் – பண்டம் (முதல் நிலை)
பணம் – பண்டம் – அதிக பணம் (இரண்டாம் நிலை)
பணம் – அதிகப் பணம் (மூன்றாம் நிலை)
இப்படி பணம் தன்னையே பெருக்கிக்கொள்வதை அடிப்படையாக க் கொண்டிருப்பதைத்தான் “பணத்தோட்டம்” என்ற உருவகமாக விளக்கினார் அறிஞர் அண்ணா. இப்படி பணம் முதலீட்டியக் குவிப்பாக மாறும்போது முதலீட்டாளர்களும், அவர்கள் நலன்களும் அரசியலமைப்பை தீர்மானிக்கும் நிலை உருவாகிறது. முதலீட்டாளர்கள் ஆளும் வர்க்கமாக வடிவெடுக்கிறார்கள். உழைப்பாளர்கள் அவர்கள் உழைப்பில் உருவாகும் பண்டங்களிலிருந்து அன்னியப்படுகிறார்கள். அவர்கள் உருவாக்கும் பண்டங்களின் மதிப்பு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதில்லை.
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் உருவான தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் உழைப்பை மோசமாகச் சுரண்டின. குறைந்தபட்ச ஊதியத்தில் அவர்கள் கசக்கிப் பிழியப்பட்டார்கள். இன்றும் உலகின் பல பகுதிகளில் இந்த நிலை நிலவத்தான் செய்கிறது. இது சமூக ஏற்றத்தாழ்வை கடுமையாக அதிகரிக்கிறது. பிறரது உழைப்பில் சிலர் செல்வந்தர்களாகி ஆடம்பரமாக வாழ்வது இயல்பாகிறது.
அதனால் தொழிலாளர்களெல்லாம் ஒன்றுபட்டு பொருள் உற்பத்தியை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், அனைத்து இயற்கைப் பொருளாதார வளங்களையும் பொதுவுடமையாக்கினால் அனைவரும் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு சமத்துவமாக வாழலாம் என்ற எண்ணமே பொதுவுடமைத் த த்துவமாக மலர்ந்தது. அதனை முதலீட்டிய உற்பத்தியின் பொருளாதார அடிப்படைகளை விமர்சிப்பதன் மூலம் ஒரு அரசியல் நெறியாக மாற்றிக் காட்டினார் கார்ல் மார்க்ஸ். ரஷியா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளில் புரட்சி நடந்து பொதுவுடமை அரசுகள் உருவாயின.
பொதுவுடமை அரசுகள் எதிர்கொண்ட சிக்கல்கள்
பொதுவுடமை சிந்தனையின், விழுமியங்களின் ஆன்மபலம் வலுவானது. அது என்னவென்றால் இயற்கை என்பது அனைத்து மானுடர்களுக்கும் பொதுவானது. அதன் வளங்களெல்லாம் அனைவருக்கும் உரியவை. அப்படி இருக்கும்போது ஒரு சிலர் சுகபோகத்திலும், வேறு பலர் வறுமையிலும் வாழ்வது என்பது அறமற்ற சமூக அமைப்பு என்பதுதான் அது.
இயற்கையின் மடியில் வாழ்ந்த ஆதிவாசிகள் சுலபமாக பொதுவுடமையை ஏற்று வாழலாம். ஆனால் தொழிற்புரட்சிக்குப் பிறகு பெரும் பொருளுற்பத்தியில், நுகர்வில் ஈடுபடும் சமூகம் மிக நுட்பமான நிர்வாகத்தைக் கோருகிறது. பொதுவுடமை என்று கூறினால் அனைத்தையும் நிர்வகித்து அனைவருக்கும் பலன்களை பகிர்ந்தளிக்க மொத்தத்துவ அரசு தேவைப்படுகிறது. அப்போது அந்த அரசை நிர்வகிப்பவர்களிடம் அதிகாரம் குவிகிறது. அது மீண்டும் அசமத்துவத்தை, ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.
எந்த அறிவுத்திறன் மனிதர்களை பொருளுற்பத்தியில் ஈடுபட வைத்ததோ, அது அவர்களை சுயநலமிகளாகவும், சுயமோகிகளாகவும் மாற்றுகிறது. ஒரு யானை இன்னொரு யானையைக் கொல்வது இல்லை. ஒரு ஒட்டகம் இன்னொரு ஒட்டகத்தைக் கொல்வது இல்லை. ஏன் தாங்கள் உண்ணக்கூடிய விலங்குகளையே பசித்தால் மட்டும்தான் விலங்குகள் கொல்கின்றன.

ஆனால் ஒரு மனிதனால் வெகு இயல்பாக இன்னொரு மனிதனைக் கொல்ல முடியும். தன்னையே மாய்த்துக்கொள்ளவும் முடியும். இந்த உளவியல் சிக்கல்தான் மார்க்ஸிற்கு இணையாக அறிவுலகம் கொண்டாடும் சிக்மண்ட் ஃபிராய்டு (1856-1939) என்பவரின் சிந்தனைகளை முக்கியமானதாக்குகிறது. மனிதர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் உளவியலைக் கொண்டவர்களாக உருவாகிறார்கள் என்பதுதான் அரசியலை எதிரிகள், நண்பர்கள் அணிசேர்கையாக மாற்றுகிறது.
சுருக்கமாக, எளிமையாகக் கூறினால் ஒரு பொதுவுடமைச் சமூகத்தை பொதுநல நோக்கில் நிர்வகிக்க மனிதர்களின் சுயநலம் இடம் தருவதில்லை. அல்லது அந்த அளவு மனித நாகரீகம் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்று கூறலாம். அதுதான் சோவியத் ரஷ்யாவின் பொதுவுடமைப் பொருளாதாரம் பெருமளவு தேக்கமடைந்து, அது உடைந்து சிதறவும், ரஷ்யா முதலீட்டிய சமூகமாக மாறவும் வழிவகுத்தது. சீனா அரசுக் கட்டுப்பாடிலேயே முதலீட்டிய உற்பத்தி முறையை அனுமதித்து விட்டது.
அதனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முதலீட்டிய சமூகம், அதன் முதலீட்டியக் குவிப்பு, அது உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை மானுடப் பொது நியதியாக மாறிவிட்டன எனலாம். ஆனாலும் மனித உரிமைகள் என்ற சிந்தனை வலுப்பெற்று, அனைத்து மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும், அனைவரும் தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு பயன்பெற வகை செய்யும் சமதர்ம நோக்கு நிலவ வேண்டும் ஆகிய விழுமியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் மக்களாட்சியும், வெகுஜன அரசியலும் சோஷலிசம் எனப்படும் சமூகவிய அரசியலுக்கு பல நாடுகளிலும் வழிவகுக்கின்றன அல்லது குறைநபட்சம் போராட இடமளிக்கின்றன.
திராவிட இயக்க விழுமியங்கள்
கார்ல் மார்க்ஸ் நிலவுடைமைச் சமூகம் முதலீட்டிய சமூகமாக மாறிய பிறகுதான் தொழிலாளர் வர்க்கப் புரட்சியும், பொதுவுடமைச் சமூகமும் சாத்தியம் என்று நினைத்தார். ஏனெனில் நிலவுடமைச் சமூகத்தில் கடவுள்-பூசாரி-அரசன் என்ற அதிகார மையத்துடன் அனைவரும் உளவியல் பூர்வமாக பிணைக்கப்பட்டிருந்தனர். இந்த பிணைப்பை தொழிற்புரட்சி தகர்த்து, தன் உழைப்பாற்றல் பொருளுற்பத்திற்க்கு இன்றியமையாதது என்ற தன்னுணர்வை தொழிலாளர்கள் பெறுகின்ற போதுதான் அவர்களது அரசியல் அணியமாக்கம் சாத்தியம் என்று நினைத்தார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நவீன அரசியல் வடிவம் பெற்றபோது தமிழ்நாட்டில் தொழிற்புரட்சி உருவாகவில்லை. நிலவுடமை விவசாய சமூகமே நீடித்தது. பத்து சதவீத மக்களே எழுதப் படிக்க தெரிந்தவர்களாக இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பூசாரி வர்க்கமான பார்ப்பனர்கள், அரசர்கள், வர்த்தகர்கள் உதவியுடன் உலகில் வேறெங்கும் காணப்படாத அளவு மனிதர்களை பிறப்பிலேயே தரம் பிரிக்கும் வர்ண தர்ம உளவியலை பெருமளவு உருவாக்கியிருந்தார்கள். அதற்கான எதிர்ப்புக் குரல்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமிருந்தும் எழுந்தவண்ணம் இருந்தாலும், சமூக அமைப்பு மொத்தத்தில் கெட்டி தட்டிப் போயிருந்தது
இந்த நிலையில் பூர்ஷ்வா ஜனநாயகம் என்று மேற்குலகில் அறியப்பட்ட, மார்க்ஸ் முக்கியமான வரலாற்று நகர்வு என்று கருதிய முதலீட்டிய மக்களாட்சி சமூகமே இந்தியாவில் எப்படி உருவாகும் என்பது தெளிவாக இருக்கவில்லை. அனைத்து மனிதர்களும் சம மானவர்கள். பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் தவறு என்பதை முதலில் அனைவரும் உணர்ந்தால்தானே மக்களாட்சி வலுப்பெறும், அதன் பிறகுதானே பொருளாதார சமத்துவத்தை, சமூகப் பகிர்தலை வலியுறுத்த முடியும் என்பதே பகுத்தறிவாளர்களின், பெரியாரின், திராவிட இயக்கத்தின் அக்கறையாக இருந்தது.
ஏனெனில் வர்ண தர்மம் , ஜாதீயம் என்பது உண்மையில் உழைப்புச் சுரண்டலின் தர்க்கமாகவே இருந்தது. உற்பத்திக்குத் தேவையான கடும் உழைப்பைத் தருபவர்கள் எல்லாம் தீண்டப்படாத பஞ்சமர்கள், சமூக விலக்கத்திற்குள்ளான சூத்திரர்களாக இருந்தார்கள். இவர்கள் பிறவியிலேயே அவ்வாறு உழைக்க விதிக்கப்பட்டவர்கள் என்ற சமூக உளவியல் உருவாக்கப்பட்டிருந்ததால், தங்கள் உழைப்பின் பலன்களை ஆதிக்க ஜாதியினர் அனுபவிப்பதை தவறானது என்றே கருத வழியில்லாமல் இருந்தது. அது அவர்களது பிறப்புரிமை என்றே கருதப்பட்டது.
இந்த நிலையில்தான் நேரடியாக பொதுவுடமை பேசுவது என்பது போதுமான ஆதரவைத் திரட்ட இயலாது என்பதை உணர்ந்தார் பெரியார். காலனீய முதலீட்டிய அரசு பொதுவுடமை பிரசாரத்தை கடுமையாக ஒடுக்கும் என்பதை உணர்ந்தபோது பெரியார் தன்னுடைய சுயமரியாதை பகுத்தறிவு பிரசாரத்தைத் தொடர்வதே முக்கியமான பணி என்று முடிவெடுத்தார். இது முழுக்க முழுக்க மார்க்சின் சிந்தனைக்கு உகந்ததே என்பதை கடந்த நூறாண்டுகால வரலாறு தெளிவாக நிரூபித்துள்ளது.

விழுமியங்களின் வரலாற்றுப் பயணம் ஒரே திசையிலானதே
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இந்தி திணிப்பை கைக்கொண்டபோது, பெரியாரும் அண்ணாவும் திராவிட நாடு என்ற தென்னிந்தியக் குடியரசிற்கான கோரிக்கையை முன்வைத்தார்கள். இந்தி திணிப்பை மொழித் திணிப்பாக மட்டுமன்றி, மொழியின் ஊடாக நடக்கும் ஆரிய பார்ப்பனீய பண்பாட்டுப் படையெடுப்பாகவும் கருதினார்கள்.
தமிழ் மொழியில் ஆரிய சிந்தனைகள் ஊடுறுவி இருந்தாலும். தமிழின் தொல்மறையான வள்ளுவம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அறுதியிட்டு இருந்ததால் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் காப்பதே ஆரிய வர்ண தர்மத்தின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்க வழி என்று நினைத்தார்கள். இந்த கோரிக்கையின் உள்ளடக்கமான சமத்துவ சமூக நீதி நோக்கினை புரிந்துகொள்ளாதவர்கள் இதனை பிரிவினைவாதமாகவும், மொழி, இன அடிப்படைவாதமாகவும் திரித்துப் பேசி இகழ்ந்தார்கள்.
பொது உடமை இயக்கத்தினருக்கும் இந்த குழப்பம் இருந்தது. அவர்கள் இந்தியா என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அதில் வர்க்கப் புரட்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றுதான் கருதினார்கள். அதனால் அவர்களால் திராவிட இயக்கத்தின் செல்திசையுடன் முழுமையாக இணைய முடியவில்லை என்பதுடன், பண்பாட்டு அம்சங்களில் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சார்ந்த முன்னெடுப்புகளிலிருந்தும் சமகாலத்தில் விலகியிருந்தார்கள். இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சிக்குப் பிறகே அவர்கள் திராவிட இயக்கத்தின், சுயமரியாதை இயக்கத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உள்வாங்குகிறார்கள் எனலாம்.
ஆனால் தி.மு.க-விற்கு பொதுவுடமை இயக்கத்தவர் தங்களுடன் இணையவேண்டும் என்ற விருப்பமும், அவர்கள் விழுமியங்கள் மீதான அக்கறையும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது எனலாம். தி.மு.க செப்டம்பர் 1949-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, தமிழ்நாடெங்கும் கிளைகள் அமைக்கப்பட்டு கட்சி வலுப்பெற்ற பிறகே முதல் மாநில மாநாடு கூட்டப்பட்டது.
அந்த மாநாட்டிற்கு பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவாவும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் பேசிய அண்ணா, தானும் ஜீவாவும், பெரியாரும் வெவ்வேறு இயக்கங்களில் இருப்பதாகத் தோன்றினாலும் தங்கள் இலட்சியங்கள் ஒன்றுதான் என்று கூறினார். திராவிட நாடு கோரிக்கையை பொதுவுடமை இயக்கம் ஏற்றுக்கொண்டால் தன் கட்சியை அதனுடன் இணைத்துவிடுவதாகக்கூட கூறினார். “திராவிடப் பொதுவுடமைக் கட்சி” என்று பெயரிடலாம் என்றார்.
கட்சிகளின் அணிசேர்க்கையில் நடைமுறை அரசியலில் பல முரண்கள் ஏற்பட்ட போதும், கம்யூனிஸ்டுகள் ‘நொதுமலர்கள்’ என்றே நாவலர் தன்னுடைய மன்றம் ஏட்டில் எழுதினார். அதாவது அவர்கள் நண்பர்களும் அல்ல, எதிரிகளும் அல்ல என்று பொருள். காரசாரமான கருத்தியல் முரண்கள் பேசப்பட்டாலும், அது நட்பு முரணாகவே திராவிட இயக்கத்தவரால் கருதப்பட்ட து எனலாம்.

கலைஞரைப் பொறுத்தவரை அவர் ஆழமான சோஷலிசப் பற்றுக் கொண்டவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. அவரே பலமுறை எழுதவும் செய்துள்ளார். குத்துகைதார ர்களுக்கு ஆதரவாக அவர் உருவாக்கிய சட்டம் எப்படி நிலவுடமை அமைப்பைத் தகர்த்தது என்பதை பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் விளக்கமாக எழுதியுள்ளார். பொது விநியோகத்துறைய மேம்படுத்த தமிழ்நாட்டிலேயே நெல் கொள்முதலுக்கு வழிவகுத்தார்.
பேருந்து சேவைகளை அரசுடமையாக்கியதன் மூலம் கிராம-நகர பொருளாதார ஒருங்கிணைப்பை துரிதப்படுத்தினார். பின்னாளில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அறிவித்தார். இப்படியோ இன்னும் எவ்வளவோ கூறலாம். முத்தாய்ப்பாக தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியதுடன், ஒரு ஆங்கிலப் பள்ளியில் அந்த பெயர்க் காரணமாக சேர்த்துக்கொள்ளாதபோதும், பெயரை மாற்ற மறுத்தார்.
முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு தகைசால் தமிழர் என்ற விருதினை உருவாக்கிய போது முதல் விருதினை பொதுவுடமை இயக்க முன்னோடி சுந்தரய்யாவிற்கும், அடுத்த ஆண்டு அதனை தோழர் நல்லகண்ணுவிற்கும் அளித்து மகிழ்ந்தார். இது போன்ற செயல்களில் இருக்கும் தொடர்ச்சி கருதத்தக்கது. அந்த தொடர்ச்சியை மனதில் வைத்துப் பார்க்கும்போது மார்க்ஸ் சிலை திறப்பு என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. அது விழிமியங்களின் வரலாற்றுச் சங்கமம்.
தொலைகாட்சியில் சிலை திறப்பு குறித்த செய்தி கூறப்படுவதற்கு முன்னால் இன்னொரு செய்தி கூறப்பட்ட து. அது பாஜக ஆளும் மராத்திய மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தியாகும். இனி வரும் காலங்களில் மக்கள் நல அரசு என்பதற்கு ஏற்படப் போகும் நெருக்கடி கடுமையானதாகவே இருக்கும்.
உற்பத்தியெல்லாம் கடுமையாக இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பணிகளையும் இல்லாமலாக்கும் சாத்தியம் தெரிகிறது. இன்றைய நிலையில் இடதுசாரி வெகுஜனவியம் என்பது மக்கள் உரிமைகளைக் காக்க இன்றியமையாதது. அந்த போராட்டங்களின் ஆன்ம பலத்திற்கான உருவகமாக எழுந்து நிற்கிறது சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை. பாசிசத்தை முறியடித்து, மக்கள் நலனைக் காக்க வெல்வோம் ஒன்றாக என்ற முதல்வர் ஸ்டாலினின் முழக்கம் எங்கும் எதிரொலிக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
