ஓசூர், கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டார். ஓசூரில் இன்று (செப்டம்பர் 11) நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சென்னை திரும்புகிறார். முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியும் மருமகன் சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி மறைவைத் தொடர்ந்து அவர் சென்னை திரும்புகிறார். இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
இதேபோல பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
மேலும் தந்தை வேதமூர்த்தி மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சபரீசன், ஆஸ்திரியா நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மறைந்த வேதமூர்த்தியின் உடல் சென்னை ஓஎம்ஆர் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணியளவில் சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
மேலும் வேதமூர்த்தியின் உடலை இன்று இரவு அல்லது நாளை சொந்த ஊருக்கு எடுத்து செல்லவும் அவரது குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர். வேதமூர்த்தியின் இறுதி சடங்குகள் நாளை செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறும்.