‘வன்மத்துடன்’ ஆடிட்டர் குருமூர்த்தியின் ‘துக்ளக்’ கார்ட்டூன்-ஸ்டாலின் சாடல்

Published On:

| By Minnambalam Desk

CM MK Stalin Cartoon

பாஜகவின் அதிகார மையமான ஆட்டிடர் குருமூர்த்தியை ஆசிரியராக கொண்டு வெளிவரும் துக்ளக் வார பத்திரிகையில் வெளியிடப்பட்ட கார்ட்டூனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். MK Stalin ‘Thuglak’

சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று ஜூன் 2-ந் தேதி நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்று ஒரு வாரப் பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் (cartoon) இடம்பெற்றிருந்தது. என்ன கார்டூன் என்றால், எந்த பத்திரிகை என்று பெயரை சொல்ல விரும்பவில்லை – நீங்களே புரிந்து கொள்ளுங்கள் – நீங்களே படித்துப் பாருங்கள் – நான் காவடி எடுப்பது போன்றும் – அமைச்சர்கள் எல்லாம் அலகு குத்திக்கொண்டு இருப்பது போன்றும் – தரையில் உருளுவது போன்றும் கார்டூன் அமைத்திருந்தார்கள். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை; மிகவும் பரிதாபமாக இருந்தது!

பக்திதான் அவர்கள் நோக்கம் என்றால், என்ன செய்திருக்க வேண்டும் – நம்முடைய அரசின் சாதனைகளை – ஆன்மீகத்திற்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டுப் பாராட்டியிருக்கலாம். ஆனால், அவர்களின் நோக்கம் அதுவல்ல; பல ஆண்டுகால வன்மம் அது! அந்த வன்மத்திற்கு வடிகால்தான் இப்படிப்பட்ட கார்டூன்கள்!

அவர்களின் ஆதரவற்ற அவதூறுகளைப் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை! என்னுடைய பணி மக்கள் பணி, என்ன தேவை என்பதை புரிந்து, அறிந்து அதற்குரிய பணியை ஆற்றுவதுதான் என்னுடைய பணி. இதையெல்லாம் நான் பார்த்து கவலைப்படுகிறேன் என்று தயவுசெய்து யாரும் நினைக்கவேண்டாம். இவைகளெல்லாம் எனக்கு ஊக்கம்; இவைகளெல்லாம் எனக்கு உற்சாகம். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள் ; கிண்டல் செய்யுங்கள்; கொச்சைப்படுத்துங்கள்; விமர்சனம் செய்யுங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share