திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்கள் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்- ஸ்டாலின் வாக்குறுதி

Published On:

| By Mathi

CM MK Stalin Rs2000

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று பிப்ரவரி 13-ந் தேதி வெளியிட்ட வீடியோ பதிவு: வணக்கம்… ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயத்துக்குதான் இந்த வீடியோ. இன்னைக்கு காலையில நம்ம அரசு சார்பில ஐந்தாயிரம் ரூபாய் உங்க அக்கவுண்ட்டுக்கு வந்திருக்கும்.

ADVERTISEMENT

எதுக்காக இந்த பணம்? நாங்க ஆட்சி பொறுப்பேற்றப்ப கொரோனா உச்சத்திலிருந்தது. அதை சமாளிச்சு மக்களின் உயிரைக் காத்தது மட்டும் இல்ல, அவங்க வாழ்வாதாரத்தைக் காக்க நாலாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினோம்.

சென்ற ஆட்சி விட்டுட்டுப் போன கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிச்சு ஆட்சிக்கு வந்ததுமே பல திட்டங்களை நிறைவேத்தினோம். நம்ம ஆட்சிக்கு வர்றதுக்கு முன்ன மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்னு அறிவிச்சேன். அப்ப இது சாத்தியமே இல்லைன்னு சிலர் சொன்னாங்க. ஆனாலும் நிதி நெருக்கடியைச் சமாளிச்சு ஒன்றிய அரசினுடைய ஓரவஞ்சனையையும் மீறி கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றிகரமா செயல்படுத்திட்டு வர்றோம்.

ADVERTISEMENT

முதல்ல ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளிச்ச இந்த திட்டம் அண்மையில அது விரிவுபடுத்தப்பட்டு இப்போ ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வராங்க. இது வெறும் நிதி உதவி இல்லை… சமூகத்துல பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்படுகிற உரிமைத் தொகை.

இந்தத் தொகையை வச்சு அன்றாட வீட்டுச் செலவுகள், குடும்பத்துல ஏற்படும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் என பல அத்தியாவசியச் செலவுகளை மகளிர் தாங்களே நிறைவு செய்ய இந்தத் திட்டம் வழிவகுத்தது. அதனாலதான் ஒவ்வொரு மாசமும் 15-ஆம் தேதி என்பது ஒவ்வொரு குடும்பத் தலைவியும் ஆவலோடு எதிர்பார்க்கிற நாளா அமைஞ்சிருக்கு.

ADVERTISEMENT

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வராங்க. இந்த உரிமைத் தொகையை மேம்படுத்தனும்னு நாம செயல்பட்டு வந்தா அதுக்கு எதிரா டெல்லியில இருக்கக்கூடிய ஒரு கூட்டமும் தமிழ்நாட்டுல அவங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடிய இன்னொரு கூட்டமும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி அடுத்த மூணு மாசத்துக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தச் சூழ்ச்சி செய்யறதா தகவல் வருது.

இது பத்தி நீதிமன்றத்துல வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருது. ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் உழைப்பை அங்கீகரிக்கிற இந்தத் திட்டத்தை மூணு மாசம் நிறுத்தி வச்சா நீங்க எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீங்கன்னு உங்க வீட்டுல ஒருத்தனா இருக்கக்கூடிய எனக்கு நல்லா தெரியும்.

கடும் வெயில்ல வேலைக்குப் போக கஷ்டமான கோடைக் காலத்துல இந்தத் தொகை நிறுத்தப்பட்டா உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும்னு என்னால உணர முடியுது. உங்க மாதாந்திர செலவை எப்படி சமாளிப்பீங்க? உங்க குடும்பத்துல நோய்வாய்ப்பட்டவங்களுக்கு மாத்திரை வாங்கி கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதுற காலத்துல அவங்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து தேவையான கல்விச் செலவுகளைச் செய்ய முடியுமா?

இந்தக் கஷ்டத்தையெல்லாம் நினைச்சு பார்த்துதான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன். அதன்படி இந்த பிப்ரவரி மாசம் மட்டுமல்லாம அடுத்த இரண்டு மாசம் அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத் தொகை தவணைகளைச் சேர்த்து மூவாயிரம் ரூபாயும் கூடுதலாக கோடைக் காலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு மேலும் இரண்டாயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து இந்த பிப்ரவரி மாதம் ஐயாயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமைத் தொகையா ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்தத் தருணத்துல இன்னொரு அன்பான வேண்டுகோள். இந்த ஐயாயிரம் ரூபாயை அடுத்த மூணு மாசத்துக்கு நீங்க பயன்படுத்திக்கணும் என்பதால கொஞ்சம் கவனமா செலவு பண்ணுங்க. முடிஞ்ச அளவுக்குச் சேமிக்கவும் பாருங்க.

அன்புச் சகோதரிகளே… உங்கள் ஆதரவோடு அடுத்து அமையப்போறதும் திராவிட மாடல் ஆட்சிதான். அதனால நீங்க மனம் குளிரும் சிறப்பான ஒரு அறிவிப்பையும் இந்த நேரத்துல சொல்ல விரும்புறேன். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்துல உங்களுடைய உரிமைத் தொகை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னா சொன்னதைச் செய்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கிற வாக்குறுதி இது.

இதையும் எப்படிப் பண்ணுவோம்னு சிலர் கேட்கலாம். கடந்த ஆட்சியின் பத்து ஆண்டுகள்ல தமிழ்நாடு அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சாதித்துக் காட்டுனவங்க நாங்க. அதனால எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டித் தமிழ்நாடே வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share