நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் (Siddharth Varadarajan and Karan Thapar கரண் தாபர்) ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குகள் தொடரப்பட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மூத்த பத்திரிகையாளர்கள் ‘தி வயர்’ செய்தி இணையதளத்தின் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு அஸ்ஸாம் மாநில போலீஸ் சம்மன் அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
.
உச்சநீதிமன்றம் இருவருக்கும் பாதுகாப்பு அளித்திருந்த நிலையில் அஸ்ஸாம் போலீசார் இந்த சம்மனை அனுப்பி உள்ளனர். வழக்கு பற்றிய விவரங்கள், முதல் தகவல் அறிக்கை நகல் எதுவுமே இல்லாமல் இந்த சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்யும் அச்சுறுத்தலுடன் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.
தேசதுரோக சட்டம் நீக்கப்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட BNS 152, சட்டமானது, தனிநபர் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
கேள்விகள் கேட்பதே தேசத்துரோகம் என்றால் ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாத இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேபோல சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரன் தாப்பர் ஆகியோருக்கு BNS பிரிவு 152ன் கீழ் அஸ்ஸாம் காவல்துறை சம்மன் அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகம் என்றால் என்னவென்று கேள்வி கேட்கும் பா.ஜ.க. அரசின் பழி வாங்கும் நடவடிக்கைதான் இந்த சம்மன். ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்கும் இந்நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.