‘தி வயர்’ செய்தி இணையதள நிறுவனர் சித்தார்த் வரதராஜன் மற்றும் தி வயர் இணையதளத்தின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் ஆகியோர் மீது அஸ்ஸாம் மாநில போலீசார் தேசதுரோக வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 22-ந் தேதி இருவரும் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தி வயர் இணையத்தில் வெளியான கட்டுரைக்காக இருவர் மீதும் தேசத்துரோக வழக்கை அஸ்ஸாமின் குவஹாத்தி கிரைம் பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். இருவர் மீதும் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 152, 196, 197(1)(D)/3(6), 353, 45, 61 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 152-வது பிரிவானது இந்திய இறையாண்மை, ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான தண்டனை வழங்கும் பிரிவு. 2022-ல் தேசத் துரோக சட்டப் பிரிவு 124 A-க்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டதுதான் 152-வது பிரிவு.
ஏற்கனவே அஸ்ஸாம் மாநில போலீசார் சித்தார்த் வரதராஜன் மீது மற்றொரு தேசதுரோக வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் சித்தார்த் வரதராஜன் மீதான நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் மற்றொரு தேசத்துரோக வழக்கு சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் மீது போடப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் போலீசாரின் புதிய சம்மனுக்கு எதிராக சித்தார்த் வரதராஜன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமக்கு வழங்கப்பட்ட சம்மன் முறையானதாக இல்லை; முதல் தகவல் அறிக்கை நகல் கூட அதில் இணைக்கப்படவில்லை; எந்த குற்றத்துக்காக சம்மன் என்ற விவரமும் அதில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளதற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
