வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தந்தை மீது மிளகாய் பொடி தூவி மூன்றரை குழந்தையை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வேலூர் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் வாகன சோதனையில் இரண்டே மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காமாட்சியம்மன் பேட்டை, பவளத்தெருவில் வேணு -ஜனனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இக்குழந்தை அருகில் உள்ள நெல்லூர்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கான்வெண்ட் பள்ளியில் பயின்று வருகிறது. வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சென்று குழந்தையை விட்டுவிட்டு வந்த தந்தை வேணு மதியம் உணவு இடைவெளிக்காக குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.
அவர் வீட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே அந்த இடத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட சுசுகி சியாஸ் ரக வெள்ளை நிற கார் ஒன்று நின்றுள்ளது.
இந்நிலையில் ஸ்கூட்டியில் குழந்தையை அழைத்து வந்த வேணு வண்டியை நிறுத்தி கேட்டை திறந்து உள்ளே சென்றதும், அந்த காரில் இருந்து ஹெல்மெட், கையுறை அணிந்துகொண்டு இறங்கிய ஒருவர் வேணு வீட்டுக்குள் செல்கிறார்.
இதையடுத்து அந்த கார் வேணு வீட்டின் வாசலிலேயே சென்று நிற்கிறது. பின்னர் குழந்தையை அந்த ஹெல்மெட் அணிந்த நபர் தூக்கி சென்று காரில் ஏறி தப்பிவிட்டார்.
அவர்களை வேணு துரத்தி சென்ற போது, கொள்ளையர்கள் வேணு மீது மிளகாய் பொடி தூவியுள்ளனர். இதனால் அவர்களை பிடிக்கமுடியவில்லை. அந்த கார் அதிவேகமாக சென்றுவிட்டது.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் ஸ்டேஷனுக்கு தொடர்புகொண்டு தகவல் சொன்ன தந்தை வேணு, தொடர்ந்து நேரடியாகவும் சென்று தனது குழந்தை கடத்தப்பட்டது குறித்து புகார் கொடுத்தார்.
இதையடுத்து வேலூர் மாவட்ட எஸ்.பி.மயில்வானன் மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகளையும் அலர்ட் செய்தார். அனைத்து கார் உள்ளிட்ட வாகனங்களையும் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து வேலூர் டிஐஜி , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என சுற்றுவட்ட மாவட்ட போலீசாரையும் அலர்ட் செய்தார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் குடியாத்தம் மாதனூர் பகுதியில் வைத்து குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.