இந்தி திணிப்பு எதிர்ப்பு : இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல! – மு.க. ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

MKS

தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல. போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக சென்னை பார்க் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து தீவிரமாக போராடிய சிவா திலீபன் ரயில் முன் சென்று தம்மையே கொடுக்க முயன்று, படுகாயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட அவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவா திலீபன் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல!

இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தியையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

ADVERTISEMENT

அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், “பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.

இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!

தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!

எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரர் சிவா திலீபன் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share