திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், முதலமைச்சரின் உழவர்நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பயிர் சேதத்துக்காக வழங்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “விவசாயிகளின் விளைச்சலில் மட்டுமல்ல, அவர்களது துன்பத்திலும் துணையாக கூட நிற்பவர்கள் தான் நாங்கள். அதனால்தான், ஐந்தாண்டுகளில், இதுவரைக்கும் 32.81 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் சேதத்திற்கு, 20 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆயிரத்து 631 கோடியே 76 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியிருக்கிறோம்.
2024-2025-ஆம் ஆண்டில், வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கருக்கு நிவாரணத் தொகையாக, 289 கோடியே 63 லட்சம் ரூபாயை, 3 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என டிசம்பர் 23ஆம் தேதி உத்தரவிட்டு தான், இந்த மாவட்ட நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.
இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதங்களுக்கு விரைவில் நிவாரண உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ ஏந்தல் கிராமத்தில் ரூ.1 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்
கலசப்பாக்கம் கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
செங்கம் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
ரூ.1 கோடியில் தொழில்நுட்ப ஒட்டு ரக பயிர்களின் நாற்றங்கால் அமைக்கப்படும்
வேளாண் சார்ந்த வேலைகளை பெற மலையூரில் ரூ.3 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்
அந்தியேந்தலில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க ரூ.2.40 லட்சத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்” உள்ளிட்ட 6 அறிவிப்புகளை வெளியிட்டார்.
