மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு!

Published On:

| By Kavi

Chief Minister orders to complete rainwater drainage work

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழை நீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Chief Minister orders to complete rainwater drainage work

தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின்  தலைமையில் இன்று (ஜூலை 17) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 

அப்போது முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவுப் பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்புப் பணிகளை திறம்பட  மேற்கொள்ள வேண்டும்.

சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். அப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நிறைவேற்றி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், “வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே இந்த பணிகளை எல்லாம் முடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 

அதேபோன்று, இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற பணிகள், பாதி முடிவுற்ற பணிகளையெல்லாம் போர்க்கால அடிப்படையில செய்து முடித்திட, மின் வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாகத் தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் இருக்கின்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share