கரூர் துயரத்தை முதல்வர் ஸ்டாலின் பொறுப்பாக கையாண்டுள்ளார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்டோபர் 4) சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், கரூர் துயரம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அவர், “கடந்த சனிக்கிழமை முதல் முதல்வர் பொறுப்பாகத்தான், நிதானமாகத்தான் செயல்பட்டு வருகிறார். அவருக்கு யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. நான் அரசாங்கத்துக்கு ஆதரவாக பேசவில்லை. தவெகவினர் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை.
கரூரில் நடந்தது விபத்துதான். தவெக நிர்வாகிகளுக்கு போதிய அனுபவம் இல்லை. உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருக்க வேண்டும். முதல்வர் சொன்னது போல எந்த தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார்கள். அவர் யதார்த்தத்தை கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று இருந்தால், நீதிமன்றம் கூட கண்டனம் தெரிவித்திருக்காது.
கரூர் சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்றால் பழி நம் மேல் வந்துவிடும் என விஜய் நினைக்கிறார் போல. ஆனால் அவரது வீடியோவை பார்க்கும்போது, வருத்தமாகத்தான் இருந்தது. அவர்
கொடிய குற்றத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றால் என்ன நியாயம்? கரூர் சம்பவத்தில் அண்ணாமலையின் பேச்சும் கூட எனக்கு வருத்தமளிக்கிறது. இது குறித்தும் அவரிடம் பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல, எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டுமென்ற வெறியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஆடு நனையுதே என்று ஓநாய் அழுவது போல தவெகவுக்காக வக்கீல் போல் வாதாடி வருகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.