செஸ் ஒலிம்பியாட்: நாராயணன் வெற்றி

Published On:

| By Prakash

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் ஏ அணியில் இடம்பெற்றிருந்த நாராயணன், மற்றொரு இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யுவை வீழ்த்தினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் 44வது செஸ் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். இந்த நிலையில், தொடர்ந்து ஆறு நாட்கள்(ஜூலை 29-ஆகஸ்ட் 3) செஸ் விளையாடிய வீரர்களுக்கு புத்துணர்வு அளிக்கும்வகையில், நேற்று (ஆகஸ்ட் 4) ஒருநாள் விடுமுறையளிக்கப்பட்டது.

இந்த ஓய்வுக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 5) செஸ் ஒலிம்பியாட்டின் போட்டிகள் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கின. இதில், இந்திய அணியின் ஓபன் ஏ பிரிவு, இந்தியா சி பிரிவுடனும், இந்திய ஓபன் பி அணியுடன் கியூபா அணியும் மோதலைத் தொடங்கின. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி அஜர்பைஜனுடனும், கிரீஸ் அணியுடன் இந்தியா பி அணியும், ஸ்விட்சர்லாந்துடன் இந்தியா சி அணியும் களம் கண்டன.

இந்த சீசனில் இந்திய ஏ அணியும், இந்திய சி அணியும் முதல்முறையாக நேருக்குநேர் மோதிக்கொள்வது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. இதில், இந்திய ஓபன் ஏ அணியில் இடம்பெற்றிருந்த நாராயணன், இந்திய சி அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யு புராணிக்கை வீழ்த்தினார். அவர் 38வது காய்நகர்த்தலில் வெற்றிபெற்றார்.
ஜெ.பிரகாஷ்

செஸ் ஒலிம்பியாட்: இந்தியாவை எதிர்த்து இந்தியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share