மருத்துவர் ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்து ரீதியாக தகுதியை இழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நிலையில் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கொள்கை வகுத்து அமல்படுத்த உத்திரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க பேரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவ மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று(ஜூலை 31) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் போக்குவரத்து துறையில் நிர்வாக பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவர் ரீதியாக தகுதி இழக்கும் போது அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோன்று இச்சலுகைகளை நேரடியாக பொது போக்குவரத்து வசதிகளை வழங்கும் பணியில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை செயலாளருக்கும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.