கோவையில் தவறான தேர்வு மையத்திற்கு வந்த பார்வை மாற்று திறனாளியை போக்குவரத்து காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று தேர்வு எழுத வைத்துள்ளனர். kovai traffice police help Visually impaired for group 4 exam
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 3,935 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இன்று (ஜூலை 12) நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், குறுக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர், வன காவலர் உள்ளிட்ட பணி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வு எழுத மாநிலம் முழுவதும் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் இந்த தேர்வு எழுத 50,144 பேர் விண்ணப்பித்தனர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக 100க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்த்திகேயன் என்பவர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு சிஎஸ்ஐ பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் கார்த்திகேயன் இன்று காலை தவறுதலாக மைக்கேல் பள்ளிக்கு சென்றார். அவரை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் கணேசன் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவரது ஹால் டிக்கெட்டை பார்த்துவிட்டு அவர் தவறான மையத்திற்கு வந்துள்ளதாகவும், அருகில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் அவருக்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து காவலர்கள் இருவரும், கார்த்திகேயனை இரு சக்கர வாகனத்தில் சிஎஸ்ஐ தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அவர் உரிய நேரத்தில் தேர்வு எழுத முடிந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் போக்குவரத்து காவலர்களின் செயல் பல தரப்பினரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. kovai traffice police help Visually impaired for group 4 exam
