ADVERTISEMENT

உதவி ஆய்வாளர்கள் பணி: சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள்,  தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கான இறுதி தேர்வுப்பட்டியலை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள  621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு ஆகியவற்றை நடத்தி 2024ஆம் ஆண்டு தற்காலிக தேர்வு பட்டியலை வெளியிட்டது. 

ADVERTISEMENT

இந்த தேர்வில் இட ஒதுக்கீடு நடைமுறை சரியாக பின்பற்றவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் திருத்தியமைக்கப்பட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

அதன்படி 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலில், முதல்முறை வெளியிட்ட பட்டியலில் இருந்தவர்களின் பெயர் இரண்டாவது முறை வெளியிட்ட பட்டியலில் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க, ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பாலவசந்தகுமாரை நியமித்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ADVERTISEMENT

மூன்று  மாதத்துக்குள் புதிய தேர்வு பட்டியலை தயாரித்து ,அதனை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வசம் ஒப்படைத்து வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.  இந்த உத்தரவின்  பேரில் பாலவசந்தகுமார் திருத்தியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பித்தார். 

ஆனால் இந்த பட்டியல் முறையாக இல்லை என்பதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று (அக்டோபர் 8) விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் அமர்வு, இட ஒதுக்கீடு நடைமுறை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை பின்பற்றியும் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை சட்டத்தை பின்பற்றியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தேர்வு பட்டியலை தயாரித்துள்ளார்.

அதில் விதிமீறல் இல்லை. இந்த மேல்முறையீடு தாமதமாக செய்யப்பட்டுள்ளது என்று கூறி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

மேலும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அளித்த அறிக்கையின் அடிப்படையில் 30 நாட்களில் இறுதி தேர்வு பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share