ADVERTISEMENT

எஸ்.பி. வேலுமணி வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆமை வேக நடவடிக்கை… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் அதிருப்தி!

Published On:

| By christopher

chennai hc justice anand venkatesh condemned dvac on sp velumani case

அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை, ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (அக்டோபர் 13) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98. 25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து அனுப்பக் கூறி, விண்ணப்பத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.

ADVERTISEMENT

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவணங்கள மொழிபெயர்க்கும் பணிக்கு கூடுதல் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பணிகளை முடித்து, மத்திய அரசு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் கேட்டுக் கொண்டார்.

இதனைக் கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை, ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என முன்னாள் அமைச்சர் கூறக்கூடும். எனவே மக்கள் நம்பிக்கையை பெற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக கருத வேண்டும்.

நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தனது வலுவை இழந்து விடும்” என காட்டமாக தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 10 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share