தாராபுரம் திமுகவில் குழப்பம்- அமைச்சர் கயல்விழியை முற்றுகையிட்ட நிர்வாகிகள்!

Published On:

| By Minnambalam Desk

Dharapuram DMK

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தை திமுக தலைமை இரண்டாகப் பிரித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆதரவாளரான துரைசாமிக்கு பதவி கொடுத்ததற்கு எதிராக அமைச்சர் கயல்விழி செல்வராஜை திமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Dharapuram DMK

திருப்பூர் ஒன்றியத்தில் மொத்தம் 16 ஊராட்சிகள் உள்ளன. தற்போது 9:7 ஊராட்சிகள் என்ற அடிப்படையில் தாராபுரம் ஒன்றியமானது, தாராபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் என பிரிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளராக கொளத்துபாளையம் மீசை துரைசாமி என்ற கேகே துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதனின் ஆதரவாளர் என கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த தாராபுரம் ஒன்றிய செயலாளராக இருந்த எஸ்பி செந்தில்குமார், பிரிக்கப்பட்ட தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தாராபுரம் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கும் கிழக்கு ஒன்றிய செயலாளராக மீசை துரைசாமி நியமிக்கப்பட்டதற்கும் திமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரமியம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜை முற்றுகையிட்டு திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது, அமைச்சர் சாமிநாதனுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு நல்ல முடிவு அறிவிக்கிறோம் என்றார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

இது தொடர்பாக தாராபுரம் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூறுகையில், திமுக நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் திடீரென தாராபுரம் ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முரசொலியை பார்த்துதான் தெரிந்து கொண்டோம்.

தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மீசை துரைசாமி ஏற்கனவே பல பதவிகளை அனுபவித்து வருகிறார். அவருக்கே மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவியும் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்து வைத்துள்ள மீசை துரைசாமியின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது. ஆகையால் மீசை துரைசாமியை உடனே மாற்ற வேண்டும்; வேறு ஒரு நிர்வாகியை கட்சித் தலைமை நியமிக்க வேண்டும். இல்லை எனில் பெரமியம், மாம்பாடி ஊராட்சிகளில் ஒட்டுமொத்தமாக திமுகவினர் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குதான் செல்ல வேண்டும் என குமுறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share