தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று நவம்பர் 8, 2025 அன்று தென் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்திலும் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.
வரும் நாட்களில், நவம்பர் 9 அன்று தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 9 அன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கான அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
