முனைவர். ச.குப்பன்
இந்தியாவின் ஊரகப் பொருளாதாரமானது அதன் சமூகத்திற்கும் செழிப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களுக்கு உயிர்நாடியாக இருந்தபோதிலும், ஒரு முரண்பாட்டுடனும் மகத்தான ஆற்றலைக் கொண்ட ஒரு துறையாகவும் திகழ்கின்றது,
ஆயினும் இது பல்வேறு ஆழ்ந்த சவால்களைக் கொண்ட சுமைகளையும் தாங்கி கொண்டுள்ளது. துடிப்பானதும் மீள்தன்மை கொண்டதுமான ஊரகப் பொருளாதாரத்தை நோக்கிய பயணமானது இந்தியாவின் பரந்த அளவிலான வளர்ச்சியின் இலக்குகளை அடைவதற்கு மிக முக்கியமானதாகும்.
ஊரக பொருளாதார வளர்ச்சியின் தூண்கள்
வேளாண்மை மட்டுமல்லாமல் அதற்கு அப்பாலும், ஊரகப் பொருளாதாரம் என்பது தனியானதொரு ஒற்றைக்கல் போன்றது அன்று; அதன் வளர்ச்சி என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல்வேறு இயல்புகளைக் கொண்ட ஒரு சிக்கலான செயல்முறையாகும். தற்போதைய பொருளாதார சூழலில் வேளாண்மையானது சிற்றூர்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற துறையாகவே இருந்து வருகின்றது, அதாவது வேளாண்மைத் துறையானது 40% க்கும் அதிகமான தொழிலாளர்களைப் பயன்படுத்தி கொள்கின்றது.
இது உணவுப் பாதுகாப்பு, பல்வேறு தொழில்களுக்கு (துணி, சர்க்கரை போன்றவை) மூலப் பொருட்களை வழங்குகிறது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இருப்பினும், இந்த பாரம்பரிய சார்பு நிலையானது தற்போது தொடர்ந்துமாறி வருகிறது. ஊரகப் பொருளாதாரமானது தற்போது படிப்படியாக பன்முகப்படுத்தப்படுகிறது, சிறிய அளவிலான உற்பத்தி, கைவினைப் பொருட்கள், சேவைகள் போன்ற வேளாண்மை அல்லாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேளான் நிலத்தின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் மாற்று வருமான ஆதாரங்களை உருவாக்குவதற்கும் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாகும்.
வேளாண்மையின் ஆதிக்கமும் அதன் பாதிப்புகளும்

வரலாற்று ரீதியாக, ஊரகப் பொருளாதாரம் வேளாண்மையுடன் ஒத்ததாக இருந்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் வாழ்கின்ற உழைப்பாளர்களில் கணிசமானவர்களை வேளாண் பணிக்கு பயன்படுத்தி கொள்கின்ற இந்தத் துறையானது, நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்கிற்கு பொறுப்பாகும். இது நமது இந்திய நாட்டின் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு எனும் ஒரு பெரிய பொறுப்பை உறுதி செய்கிறது. இருப்பினும், வேளாண்மையின் மீதான இந்த அதிகப்படியான நம்பகத்தன்மை ஊரக பொருளாதாரத்தையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.
1. வேளாண்மையின் துயரம்: இந்திய வேளாண்மையின் குறைந்த உற்பத்தித் திறன் ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாகும். இது பெரும்பாலும் காலாவதியான வேளாண்மை நுட்பங்கள், துண்டு துண்டான சிறிய அளவிலான நில உடைமைகள், கணிக்க முடியாத பருவமழையை அதிகம் சார்ந்திருத்தல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு உழவனின் வாழ்வாதாரம் என்பது எப்போதும் வானிலையின் தயவிலேயே உள்ளது, மேலும் ஒரு மோசமான வானிலை பருவமானது கடுமையான கடன் சுமைக்கு காரணமாகிறது.
அதனோடு, வேளாண் பொருட்களுக்கு நிலையற்ற சந்தை விலைகளாலும் பெரும்பாலும் இடைத் தரகர்களாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற சிக்கலான விநியோகச் சங்கிலி ஆகியவற்றிற்கு எதிராக கடுமையான போராட்டத்தை உழவர்கள் எதிர்கொள்கின்றனர், மேலும் வேளாண் பொருட்களின் இலாபத்தின் பெரும் பங்கை இடைத் தரகர்கள் உறிஞ்சிக் கொண்டே இருக்கின்றார்கள்.
2. காலநிலை மாற்றம்: ஒழுங்கற்ற வானிலை பருவமுறைகள், வறட்சி, வெள்ளம், மண் சரிவு போன்ற மாறிவரும் காலநிலையின் விளைவுகள் வேளாண்மைக்கு இருத்தலியலில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த சுற்றுச்சூழல் சவால்கள் வேளாண் விளைச்சலைக் குறைப்பது மட்டுமல்லாமல், உழவர்களை நீர் மேலாண்மை, பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான கூடுதல் செலவுகளைச் செய்ய கட்டாயப்படுத்துகின்றன, அதனோடு வேளாண்மை செய்பவர்களை அதிக கடன்சுமையில் சிக்கி தவிக்குமாறு மேலும் அதிகமாக நெருக்கடிக்குள்ளாக்குகின்றன.

கட்டமைப்பு பற்றாக்குறைகளை சமாளித்தல்
வேளாண்மைக்கு அப்பால், ஊரக பொருளாதாரம் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தடுக்கின்ற முறையான சிக்கல்களுடன் போராடுகிறது.
1. உள்கட்டமைப்பின் பற்றாக்குறை: இந்தியாவின் ஊரகப்பகுதிகள் இன்னும் அடிப்படை உள் கட்டமைப்பில் பின்தங்கியேயுள்ளன. பல்வேறு சிற்றூர்களில் அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலைகள், தொடர்ச்சியான மின்சாரம், சுத்தமான குடிநீர் ஆகியன இல்லாமல் அல்லலுறுகின்றன. இந்த உள்கட்டமைப்பு இடைவெளி ஊரக சமூகங்களை தனிமைப்படுத்துகிறது, கல்வி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றிற்கான எளிதான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் ஊரகப்பகுதிகளின் வணிகங்கள் பெரிய சந்தைகளுடன் இணைவதை கடினமாக்குகிறது. சரியான குளிர்பதன சேமிப்பு கிடங்குகளும், போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் வேளாண் பொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன, இது உழவர்களின் வருமானத்தை பேரளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2. வேலைவாய்ப்பின்மையும் இடம்பெயர்வும்: வேளாண்மையானது பருவகால இயல்பினை கொண்டிருப்பதால் பரவலான வேலையின்மைக்கும் (underemployment) மறைமுக வேலை வாய்ப்பின்மைக்கும் (unemployment) வழிவகுக்கிறது. ஊரகப்பகுதிகளில் வேளாண்மை அல்லாத வேலை வாய்ப்புகள் மிக்ககுறைவாக இருப்பதால், கணிசமான எண்ணிக்கையிலான ஊரகப்பகுதியின் இளைஞர்களும் திறமையான தொழிலாளர்களும் சிறந்த நல்ல வேலை வாய்ப்புகளைத் தேடி நகர்ப்புற மையங்களை நோக்கி இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த “திறனின் வடிகால்(brain drain)” ஆனது ஊரகப் பகுதிகளில் வாழும் சமூக வாழ்க்கைகளை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், நகர்ப்புற உள்கட்டமைப்பில் பெரும் அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
3. நிதிஉதவி கிடைக்காததும், சமூக விலக்கும்: முறையான நிதி சேவைகளுக்கான எளிய அணுகல் ஒரு சவாலாகவே உள்ளது. ஊரகப் பகுதிகளில் வாழும் பல குடும்பங்கள் எளிதான வங்கி அணுகலைக் கொண்டிருக்கவில்லை. முறை சாரா கடன், அதிக வட்டி கடன் ஆகியவற்றை வழங்குபவர்களையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இதனால் அவர்கள் கடன்வலை எனும் பெருஞ்சுழலில் சிக்கி அதிலிருந்து வெளியேறுவதற்கு வழி எதுவும் கிடைத்திடாமல் தவிக்கின்ற சூழலுக்கு ஆளாகின்றார்கள். மேலும், ஊரகப்பகுதிகளில் தரமான கல்வியும் சுகாதார வசதிகளும் இல்லாதது ஊரகப் பகுதி வாழ் மக்களை வறுமை சுழற்சியில் நிலைநிறுத்துகிறது அதனோடு மனித மூலதன வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
ஊரகப் பகுதியின் மாற்றத்திற்கு வழி வகுத்தல்
இவ்வாறான பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, இந்திய அரசாங்கம் முழுமையான ஊரகப்பகுதியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட பலதரப்பட்ட முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
1. உள்கட்டமைப்பும் இணைப்பும்: பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) போன்ற செயல் திட்டங்கள் அனைத்து வானிலை நிகழ்வுகளையும் தாங்கி கொள்கின்ற சாலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளன, இது ஊரகப்பகுதிகளின் இணைப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இது வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசிய சமூக சேவைகளுக்கான அணுகலையும் மேம்படுத்தியுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் போன்ற செயல்திட்டங்கள் ஊரகப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன்வாயிலாக, பிற பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரத்தை விடுவிப்பதற்கும் செயல்பட்டு வருகின்றன.

2. வேலைவாய்ப்பும் வாழ்வாதாரங்களும்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) ஊரகப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு 100 நாட்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது, இது ஊரகப்பகுதிகளில் வாழ்கின்ற சாதாரண பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு வளையத்தை வழங்குகிறது. அதனோடு சாலைகள் நீர்நிலைகள் போன்ற நீடித்த வளங்களை உருவாக்கி பராமரிப்பும் செய்கின்றது. தேசிய ஊரக வாழ்வாதார மிஷன் (NRLM) ஆனது சுய உதவிக் குழுக்களின் (SHGs) மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழுக்கள் வளங்களை சேகரிக்கவும், நுண் நிதி கடனை எளிதாக அணுகவும், சிறு நிறுவனங்களைத் தொடங்கவும், அதன் மூலம் தம்முடையவீட்டு வருமானத்தை பன்முகப்படுத்தவும் பெண்களுக்கு ஒரு நிலையான தளத்தை வழங்குகின்றன.
3. ஊரகப் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துதல்: முற்றிலும் வேளாண்மையை சார்ந்த பொருளாதாரத்திலிருந்து மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மாதிரிக்கு கவனத்தை மாற்றுவதே ஒரு முக்கிய உத்தியாகும். கைவினைப்பொருட்கள், சிறிய அளவிலான பொருட்களின் உற்பத்தி , ஊரகப் பகுதிகளில் சுற்றுலா போன்ற வேளாண்மை அல்லாத செயல்பாடுகளை மேம்படுத்துவது மிக முக்கியமாகும். தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா (DDU-GKY) போன்ற செயல்திட்டங்களின் மூலம் திறன் மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் உந்துதல், இந்த வளர்ந்து வரும் துறைகளுக்குத் தேவையான திறன்களுடன் ஊரகப் பகுதிவாழ் இளைஞர்களை தயார்செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. நிதிவசதி, தொழில்நுட்பம்: பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) ஆனது மில்லியன் கணக்கான வங்கி வசதியற்ற ஊரகப் பகுதிகளின் பொதுமக்களை முறையான நிதி அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளது. பாரத்நெட் போன்ற முயற்சிகளால் எளிதாக்கப்பட்ட அறிதிறன்பேசி, இணைய இணைப்பின் விரைவான விரிவாக்கம், எண்ணிம வசதியை பாலமாக மாற்றுகிறது, ஊரகப் பகுதியின் தொழில் முனைவோர் தகவல், மின் வணிக தளங்கள், எண்ணிம நிதிப் பரிமாற்றங்கள் ஆகியவற்றினை எளிதாக அணுக உதவுகிறது, இதன் மூலம் அவர்களை பரந்த பொருளாதாரத்தில் உறுப்பினர்களாக ஒருங்கிணைக்கிறது.

முடிவாக, இந்தியாவின் ஊரகப் பகுதியின் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது நிலைத்தன்மைக்கும் புதுமைக்குமான பயணமாகும். வலிமையான பல்வேறு சவால்கள் குறுக்கிட்டாலும், அரசாங்கம், தனியார் துறை, உள்ளூர் சமூகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியை கொண்டு இந்த பாதிப்புகளை வாய்ப்புகளாக மாற்ற முடியும். மீள்தன்மை கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், தொழில் முனைவோர்களை வளர்ப்பதன் மூலமும், சமூகங்களை மேம்படுத்துவதன் மூலமும், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அதன் ஊரகப் பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ளப் படுவதை உறுதிசெய்ய முடியும், இது மிகவும் சமமான, வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.