முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்திருப்பதன் மூலம் இந்தியாவை சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்கும் முயற்சி தொடங்கிவிட்டது என திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கக் கூடிய கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31-வது நாள் அவர்களது பதவி பறிக்கப்படும் என்பதுதான் மத்திய அரசின் சர்ச்சை மசோதா. இந்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை கிழித்து அமித்ஷா முன்பாக வீசினர்.
இந்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது கறுப்பு நாள். இந்த மசோதா கறுப்பு மசோதா. வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் இப்படித்தான் போக்கை தொடங்குவர். இந்தியாவையும் சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றனர்.
வாக்கு திருட்டு விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே இப்படியான ஒரு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. வாக்கு திருட்டு விவகாரத்தை தொடர்ந்து மத்தியில் அமைந்துள்ள அரசு, உண்மையிலேயே சட்டப்பூர்வமானதுதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்குகள் திருட்டு, உரிமை குரல்களை நசுக்குவது, மாநிலங்களை ஒடுக்குவது என்பது எல்லாம் சர்வாதிகாரத்தின் தொடக்கம்தான்.
மத்திய அரசின் இந்த மசோதாவானாது, பாஜாவின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து பதவிகளை பறிப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகளை எந்தவித நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் பறிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான என சாடியுள்ளார்.