தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீதான சிபிஐ வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், இயக்குநராக உள்ள ட்ரூடம் இபிசி லிமிடெட் நிறுவனம் 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து ரூ.30 கோடி கடன் பெற்றது. ஆனால் தங்களிடம் பெற்ற கடனை, ரவிச்சந்திரன் தமது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டார்; இதனால் தங்களுக்கு ரூ22 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்பது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புகார்.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் புகாரின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு ரவிச்சந்திரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் அமைச்சர் நேரு, மக்களவை எம்பி அருண் நேரு உள்ளிட்டோர் இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது. பின்னர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீதான சிபிஐ வழக்கை ரத்து செய்து இன்று ஜூலை 7-ந் தேதி தீர்ப்பளித்தது. K.N. Nehru Ravichandran High Court
மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சமரச மையத்துக்கு ரவிச்சந்திரன் ரூ15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இதில் வங்கிக் கடன் மோசடி நடைபெறவில்லை; அதிகாரிகளும் உடந்தையாக இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
