பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ரூ.8 லட்சம் லஞ்சப் புகாரில் அம்மாநில டிஐஜி ஹர்சரன் புல்லர், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி ரொக்கம் மற்றும் 1.5 கிலோ தங்க நகைகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் ஃபதேஹர் மாவட்டத்தைச் சேர்ந்த பழைய இரும்பு வர்த்தகர் ஒருவர் சிபிஐயிடம் டிஐஜி ஹர்சரன் புல்லர், ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சண்டிகர் சிபிஐ அதிகாரிகள் ஹர்சரன் புல்லரின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பஞ்சாப் மாநில போலீசாருக்கு சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை.
டிஐஜி ஹர்சரன் புல்லரின் சண்டிகரில் செக்டார் 40-ல் உள்ள வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று (அக்டோபர் 16) சோதனை நடத்தினர். இந்த சோதனையை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடையும் வகையில் ரொக்கப் பணம், உயர் ரக கடிகாரங்கள், தங்க நகைகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் குவியல் குவியலாக டிஐஜி புல்லர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.
ஹர்சரன் புல்லர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய பல மணிநேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்டவை:
- ரூ.5 கோடி ரொக்கப் பணம்
- 1.5 கிலோ தங்கம்
- BMW, Audi உள்ளிட்ட சொகுசு கார்களின் சாவிகள்
- ஏராளமான சொத்துகளின் ஆவணங்கள்
- 22 உயர் ரக கடிகாரங்கள்
- வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 லிட்டர் உயர்ரக மதுபான பாட்டில்கள்
- இரட்டை குழல் துப்பாக்கி
- பிஸ்டல்
- ரிவால்வர்
- ஏர் கன் மற்றும் தோட்டாக்கள
டிஐஜி ஹர்சரன் புல்லரின் உதவியாளர் கிர்ஷ்ஹானு ரூ.21 லட்சம் ரொக்கப் பணத்துடன் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கினார்.

இந்த சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ அதிகாரிகள், டிஐஜி ஹர்சரன் புல்லர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணத்தை எண்ணுவதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெறுவதாக தெரிவித்தனர்.

தற்போது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஹர்சரன் புல்லர், நீதிமன்றத்தில் அக்டோபர் 17-ந் தேதி ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
யார் இந்த ஹர்சரன் புல்லர்?
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபி மெஹல் சிங் புல்லரின் மகன் ஹர்சரன் புல்லர். அகாலி தளத்தின் தலைவர் பிக்ரம் சிங் மஜிதா தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார் டிஐஜி ஹர்சரன் புல்லர்.
பஞ்சா மாநிலத்தின் ரோபார் சரக டிஐஜியாக 2024-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி பொறுப்பேற்றார் புல்லர். அதற்கு முன்னர் பாட்டியாலா டிஐஜியாகவும் பணியாற்றினார் ஹர்சரன் புல்லர். பஞ்சாப் மாநில டிஐஜி வீட்டில் கட்டு கட்டாக ரூ5 கோடி ரொக்கப் பணம், குவியல் குவியலாக தங்க நகைகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.