தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது: மத்திய அமைச்சர் குமாரசாமி

Published On:

| By Mathi

Mekedatu Dam Karnataka

தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடகா மாநில அரசால் கட்ட முடியாது என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். Cauvery Karnataka Tamilnadu

இது தொடர்பாக மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்கின்றனர். தமிழகத்தில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் மேகதாது அணை கட்டுவதற்கான அலுவலகத்தை திறந்து என்ன பயன்?

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தெம்பு இல்லை. தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சியான திமுகவை எதிர்க்கக் கூடிய வலிமை காங்கிரஸுக்கு இல்லை.

மேகதாது அணை விவகாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் வீணடித்துவிட்டது. மேகதாது அணைக்காக தமிழகத்தின் அனுமதியைப் பெற்றால் 5 நிமிடத்திலேயே பிரதமர் மோடியின் அனுமதியை நான் பெற்றுத் தருவேன். காங்கிரஸ் கட்சியினருக்கு என்னை கண்டு அச்சம் வந்துவிட்டது. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share