தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சார கூட்டத்தை தொடங்கினார். விஜய்யை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்த நிலையில் விஜய் திட்டமிட்ட நேரத்தில் பிரச்சாரத்தில் பேச முடியாத சூழல் ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து அவர் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. இதனால் அரியலூரில் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பிய விஜய் பெரம்பலுரில் நடக்கவிருந்த பிரச்சார கூட்டத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார்.
இதனால் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். முன்னதாக ஒரு நாளில் மூன்று இடங்களில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில் இனி இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய விஜய் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல பகுதிகளில் உள்ள மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய போலீசார் கடும் நிபந்தனைகளை விதித்து வருவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் தவெக சார்பில் அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இல்லாமல் பரிசீலித்து அனுமதி வழங்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கடந்த 9 மற்றும் 15ஆம் தேதிகளில் தவெக சார்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பரப்புரை அனுமதி கூறும் மனுக்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழக துணை பொது செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும் என நீதிபதி சதீஷ்குமாரிடம், தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி முறையிட்டார். ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்க மறுத்த நீதிபதி நாளை விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.