அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2026 தேர்தலை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்கொள்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவுள்ளார் விஜய். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார். கட்டுக்கடங்காத தொண்டர்கள், ரசிகர்களின் கூட்டத்தால் விஜய் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு செல்ல 4 மணி நேரம் ஆனது.
திருச்சியில் உரையாற்றிவிட்டு அரியலூர் செல்ல இரவு 8 மணி ஆகிவிட்டது. அதனால் பெரம்பலூரில் விஜயால் உரையாற்ற முடியவில்லை. இதனால் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்தசூழலில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறைக்கு செல்கிறார் விஜய்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், “திருச்சி பிரச்சாரத்துக்கு கடுமையான நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கினர். டிசம்பர் 20 ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளார். எனவே, விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
மேலும் அதில், “ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் காவல் துறை அனுமதி வழங்குகிறது. அதேபோல தவெகவுக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கக் கோரியும் கடந்த 9 மற்றும் 15ஆம் தேதிகளில் டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டது” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 18) நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ‘நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகளும் தவெகவுக்கு விதிக்கப்படுகிறது.
எந்த வழியில் சென்னை திரும்ப வேண்டும்? எத்தனை வாகனம் வர வேண்டும்? என்றும் நிபந்தனை விதிக்கின்றனர். கர்ப்பிணிகள், மாற்றுத்தினாளிகள் வரகூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படி கூற முடியும்” என்று வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கலாம் தானே என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் போலீஸ் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, ”எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படாமல், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது” என்றார். அதோடு திருச்சி பரப்புரையின் போது தவெக தொண்டர்கள் செய்ததையும், கட் அவுட் மேல் ஏறி நின்ற புகைப்படத்தையும் காட்டினார்.
இதையடுத்து நீதிபதி, “முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் கிடையாது. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும்.
தலைவராக இருக்கும் நீங்கள்தானே கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். பொது சொத்துகளை சேதப்படுத்தக்கூடாது” என்று அறிவுறுத்தினார்.
அதோடு, சேதப்படுத்தப்பட்ட பொதுசொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இல்லையெனில் நீதிமன்றம் தலையிட நேரிடும் என்று எச்சரித்தார்.
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என கோரிக்கை வைத்து மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே?, உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இதனை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா? எனவும் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி, பொதுச்சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
விதிமுறைகள் குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.