பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது காஞ்சிபுரத்தில் ரூ.450 கோடி மதிப்பிலான சர்க்கரை ஆலை வாங்கிய விவகாரத்தில் சசிகலா மீது பினாமி தடை சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது.
நாட்டில் புழக்கத்தில் உள்ள கருப்பு பணத்தை நீக்கும் நடவடிக்கை என்று கூறி மோடி அரசு நவம்பர் 8, 2016ல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியது. அப்போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் போலியான நிறுவனங்களை தொடங்கி பணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு ஆபரேசன் கிளீன் மணி என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழி வி.கே. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது . இந்த நிலையில் சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.120 கோடி வாங்கிய மோசடியில் சிக்கியது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். காஞ்சிபுரம், திருச்சி, தென்காசி ஆகிய 3 இங்களில் சோதனை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சர்க்கைரை ஆலையை நிர்வகித்து வந்த ஹிதேஸ் ஷிவ்கான் படேல், அவரது சகோதரர் தினேஷ் படேல் ஆகியோரிடமிருந்து சசிகலா ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கியதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெங்களூரு சிபிஐ அதிகாரிகள் ஜூலை 9ம் தேதி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் ஹிதேஷ் ஷிவ்கான் படேல் காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையை விற்பனை செய்ய மொத்தமாக ரூ.450 கோடியை பழைய நோட்டுகளாக பெற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அவரது சதோதரர் தினேஷ் படேல் ஆகியோருடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பெற்ற வாக்கு மூலம் இடம் பெற்றது. இதில் சர்க்கரை ஆலை பினாமி சொத்து என்றும் அதில் சசிகலா உண்மையான உரிமையாளர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மோசடியாக ரூ.120 கோடி கடன் பெற்றது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், முதல் தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தற்போது அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.
இந்த சூழலில் கட்சியை இணைக்க செங்கோட்டையனின் முயற்சிக்கு சசிகலா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அவர் குறித்த எஃப் ஐ ஆர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.