தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் பெரிய கிரேன் மூலமாக மாலை அணிவித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் (செப்டம்பர் 20) தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருவாரூர் தியாகராஜர் கோவில் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது காவல்துறை அனுமதி இல்லாமல் திருவாரூர் பனகல் சாலை தெற்கு வீதி சந்திப்பில் ராட்சத கிரேன் மூலமாக மிகப்பெரிய மாலையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அணிவித்தனர்.
அந்த மாலையை தனது பிரச்சார வாகனத்தில் நின்ற நிலையிலேயே விஜய் ஏற்றுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாக கூறி திருவாரூர் நகர காவல் துறையினர் தமிழக வெற்றி கழக திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் 2 நிர்வாகிகள் மற்றும் கிரேன் உரிமையாளர் ராஜேஷ் ஆகிய 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.