ஈஷா எரிவாயு மயானத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் ஈசா அறக்கட்டளை சார்பில் காலபைரவர் எரிவாயு தகன மண்டபம் கட்ட, கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உதவி இயக்குனர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒப்புதல் அளித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மொத்தம் மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை ஜனவரி 21ஆம் தேதி தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா மற்றும் அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது “தமிழ்நாடு கிராம பஞ்சாயத்துகள் கல்லறை மற்றும் சுடுகாடு விதிகளின்படி குடியிருப்பு அல்லது குடிநீர் வினியோக ஆதாரத்திலிருந்து 90 மீட்டர் தொலைவில் மயானம் அமைக்க உரிமம் வழங்குவதை தடை செய்யவில்லை. கிராம பஞ்சாயத்திடம் உரிமம் பெறுவது மட்டுமே முன் நிபந்தனை என்று விதிகள் உள்ளன” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் தகனமேடை கட்டுவது என்பது பொது நலனுக்கு எதிரானது அல்ல. அது சமூகத்திற்கு பயன்படும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
கோவையில் மட்டும் 13 மயானங்களை ஈஷா பராமரித்து வருகிறது. ஈஷா சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் ‘வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை’ வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
