பிஃபா 2026 உலகக் கோப்பைக்குத் போட்டிக்கு மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள உலகின் மிகச்சிறிய நாடான கேப் வெர்டே (Cape Verde) தகுதி பெற்றுள்ளது.
பிஃபா கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக 2026 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியானது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி டெக்சாஸில் உள்ள டாலஸ் அல்லது நியூயார்க்கில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 32 நாடுகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், வரும் 2026-ல், பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களைச் சேர்ந்த அதிக நாடுகள் முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நாடுகளில் உலகின் மிகச்சிறிய நாடான கேப் வெர்டே (Cape Verde) என்ற ஆப்பிரிக்கத் தீவு நாடு முதன்முறையாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னர் டிரினிடாட் மற்றும் டொபாகோ (2006) இந்தச் சாதனையை வைத்திருந்தது.

மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள, பத்து எரிமலைத் தீவுகளைக் கொண்ட ஒரு சிறிய நாடு, உலகில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக கேப் வெர்டே உள்ளது.
ஒப்பீட்டளவில், கேப் வெர்டேவின் மொத்தப் பரப்பு 4,033 சதுர கி.மீ (4,033 km²). இது தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தின் பரப்பை விடச் சற்று குறைவு. மக்கள் தொகை சுமார் 5,25,000 ஆக உள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் மக்கள் தொகையை விடக் குறைவானது.
ஆப்பிரிக்கத் தகுதிச் சுற்றில், ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றான கேமரூனை வீழ்த்தி, தனது குழுவில் முதலிடத்தைப் பிடித்து கேப் வெர்டே இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
கேப் வெர்டே அணியின் இந்த சாதனை ’கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது‘ என்ற தமிழ் பழமொழிக்கு வலிமை சேர்த்துள்ளதாக கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.