பொங்கலன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வு வரும் ஜனவரி 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கலன்று இந்திய பட்டயக் கணக்காளர் கழகம் சார்பில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் முக்கிய பண்டிகை நாளில் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு கடும் சிரமங்களை தரும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்திய பட்டயக் கணக்காளர் கழகத் தலைவர் சரன் ஜோத் சிங் நந்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில் பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் ஆகிய நாட்களான ஜனவரி 15,16 மற்றும் 17ம் தேதி களில் இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளை அறிவித்துள்ளது. இது தேர்வர்களுக்கு கடும் சிரமங்களை ஏற்படுத்தும் என்று முறையீடுகள் வந்துள்ளது. எனவே பொங்கல் பண்டிகை கொண்டாடும் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 15ம் தேதி நடைபெற இருந்த சிஏ இண்டர்மீடியட் தேர்வு ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 15ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் பதிவில், “பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சி. ஏ. (இண்டர்) தேர்வுகள் தள்ளி வைப்பு. இது சம்பந்தமாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்திற்கு டிச:18 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இந்நிலையில் ஜனவரி 15 அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஜன 19 அன்று மாற்றப்பட்டுள்ளது. மாற்றியதற்கு வேறு காரணத்தை சொல்லியுள்ளதன் மூலம் அவர்கள் ஆறுதல் அடைந்து கொள்ளட்டும்.” என தெரிவித்துள்ளார்.
