விளவங்கோடு, திருக்கோவிலூரில் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும் பம்பரமாய் சுழன்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் பணி பாதுகாப்புக்காக மொத்தம் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ள நிலையில், நேற்று முதல் கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படை சென்னை வந்தடைந்தனர்.
இந்த நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு இன்று தொடங்கியுள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 700 இளைஞர்கள் பங்குபெறும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
பொதுவாக ஒரு தொகுதி காலியானால், 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
இந்த நிலையில் ’பாஜகவிற்கு கட்சி தாவியதால் தனது பதவியை ராஜினாமா செய்த விஜயதரணியின் விளவங்கோடு தொகுதி மற்றும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்று குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும்.
திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை தகவல் வரவில்லை.
சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்” என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் : பெற்றோர்களே மறந்துராதீங்க!