மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 24) உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் அருகே உள்ள புதிய வீட்டின் கட்டுமான பணியை ஆம்ஸ்ட்ராங் பார்த்துக் கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் முக்கிய குற்றவாளிகளாக பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தமன் உள்ளிட்ட 28 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 7,087 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கொலையாளிகளில் ஒருவராக கருதப்பட்ட திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த கொலை சம்பவத்தினை பல கும்பல்கள் இணைந்து இருப்பதும் சிபிசிஐடி என்ற மாநில குற்றப் புலனாய்வுத் துறை மூலம் விசாரணையில் தெரியவந்தது.
எனினும் கொலை சம்பவம் நடந்து ஒரு வருடங்கள் தாண்டிய நிலையில், முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லையென கோரி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்ம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கே. இம்மானுவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆம்ஸ்ட்ராங் எட்டு பேர் கொண்ட ஆயுதக் கும்பலால் அவரது சகோதரர் கே. வீரமணி, ஓட்டுநர் அப்துல் கனி, ரியல் எஸ்டேட் தரகர் பாலாஜி மற்றும் கட்டிடக் கட்டுமானத் தொழிலாளர்கள் மோகன்ராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
வீரமணி தனது சகோதரரைப் பாதுகாக்க முயன்றபோது அவரது தலை மற்றும் முதுகில் கத்தியால் குத்தப்பட்டார், மேலும் அவரது புகாரின் பேரில், போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அவர் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியும் என்று போலீசாரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அடையாள அணிவகுப்பை நடத்த காவல்துறை இதுவரை நடத்தவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
காவல்துறை தரப்பில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூட்டு காவல் ஆணையர் தலைமையில் ஒரு துணை ஆணையர், இரண்டு உதவி ஆணையர்கள், 16 ஆய்வாளர்கள், 19 துணை ஆய்வாளர்கள் மற்றும் 44 கான்ஸ்டபிள்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் காவல்துறை விசாரணையை முடித்து 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ‘சாம்பவா’ செந்தில் என்கிற செந்தில்குமரன் மற்றும் பதினெட்டாவது குற்றவாளியான ‘மொட்டை’ கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணகுமார் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “குற்றத்தை நேரில் கண்ட சாட்சிகள் பலர் இருந்தும், கொலை வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என்ற அடிப்படைத் தேவையை கூட நகர காவல்துறை பின்பற்றவில்லை. பெரும்பாலான குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ள குறைபாடுகளால் மட்டுமே விடுதலையில் முடிவடைகின்றன, அதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என தமிழக காவல்துறையை கடுமையாக கண்டித்ததுடன், வழக்கின் தீர்ப்பு தேதியை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி முறையாக விசாரிக்காததை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் 6 மாத காலத்திற்குள் இடைக்கால குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.