கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கான போனஸ் அறிவிப்பை தமிழக அரசு இன்று (அக்டோபர் 16) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். வரும் 20ஆம் தேதி திங்கள் அன்று தீபாவளி வருகிறது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகி வருகிறது.
நேற்று (அக்டோபர் 15) போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ‘தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2025-2026-இல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம். தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பணியாளர்களுக்கு ரூ. 44 கோடியே 11 இலட்சம் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.