ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி போனஸ் வழங்கப்படும்.
அந்தவகையில் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு இன்று (செப்டம்பர் 24) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக 10,91,146 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி வழங்கப்பட உள்ளது.
தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் இத்தொகை துர்கா பூஜை மற்றும் தசரா விடுமுறை நாட்களுக்கு முன்னதாக வழங்கப்படும்.
அதே போல் இந்த ஆண்டும் சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் வழங்கப்பட உள்ளது என்று ரயில்வே துறை கூறியுள்ளது.
அதிகபட்சமாக ரூ.17,951 அளவிற்கு தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியருக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படவுள்ளது.
ரயில்தடப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் மேலாளர்கள் (கார்டு) நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அமைச்சக ஊழியர்கள், மற்றும் இதர குரூப் “சி” ஊழியர்கள் போன்ற பல்வேறு பிரிவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது.