வேலூர் மாவட்டத்தில் மூன்றரை வயது குழந்தை, தந்தையின் கண் முன்னே கடத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காமாட்சியம்மன் பேட்டை, பவளத்தெருவில் வேணு – ஜனனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். வேணு பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் சமயத்திலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. நெல்லூர்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கான்வெண்ட் பள்ளியில் யோகேஷ் ப்ரீகேஜி படித்து வருகிறான். இன்று (செப்டம்பர் 24) காலை வழக்கம் போல் குழந்தையை பள்ளியில் விட்டு வந்த வேணு, மதியம் 12.30 மணியளவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
குழந்தை கடத்தல்…
தனது ஸ்கூட்டியில் குழந்தையை முன்னால் அமரவைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த வேணு, குழந்தையை வண்டியில் அமரவைத்துவிட்டு, இறங்கி சென்று கேட்டை திறந்து, மீண்டும் வந்து வண்டியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது அதே தெருவில் வேணுவின் பக்கத்து வீட்டுக்கு முன் வெள்ளை நிற மாருதி சுசுகி சியாஸ் காரில் நின்றிருந்த மர்ம நபர்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
வேணு குழந்தையை அழைத்துக்குகொண்டு உள்ளே சென்றதும், காரில் இருந்து ஒருவர் தலையில் ஹெல்மெட், கையில் கையுறை அணிந்துகொண்டு இறங்குகிறார். இறங்கியதும் அந்த கார் வேணுவின் வீட்டருகே சென்று தயாராக நிற்கிறது.
இந்தநிலையில் காரில் இருந்து இறங்கிய நபர், வேணுவின் வீட்டுக்குள் சென்று தனது கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவிவிட்டு ஒருசில நொடிக்குள் குழந்தையை தூக்கிகொண்டு சென்று காரில் ஏறிவிட்டார்.
வேணு பின்னாலேயே கத்திக்கொண்டு சென்று குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. அந்த கும்பல் வேணுவை தள்ளிவிட்டுட்டு அதிவேகமாக தப்பித்துவிட்டது.
இதுதொடர்பாக வேணு கூறுகையில், ‘குழந்தையை கையில் வைத்திருந்த போதே கண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டு பிடுங்கிக் கொண்டு போய்ட்டான்… பின்னாடியே ஓடிபோய் காரிலிருந்து குழந்தையை இழுத்தபோது என்னை தள்ளிவிட்டுட்டான்’ என்று தெரிவித்தார்.
இந்தசம்பவம் எல்லாம் வேணு வீட்டுக்கு அருகிலிருந்த விட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
இந்தநிலையில் வேணு குடியாத்தம் டவுன் ஸ்டேஷனுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததுடன், உடனடியாக காவல்நிலையத்துக்கு விரைந்து, தனது குழந்தையை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார்.
வேலூர் மாவட்டம் ஆந்திரா பார்டரில் இருப்பதால், கொள்ளையர்கள் தப்பித்துவிடக் கூடாது என மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகளையும் எஸ்.பி.மயில்வானன் அலர்ட் செய்தார். கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
போலீசார் அலர்ட்
குழந்தை கடத்தப்பட்ட சமயத்தில் வேலூர் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களின் உட்கோட்டங்களில் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்ளிட்டோர் கலந்துகொண்ட, வழக்கு விசாரணை சம்பந்தமான ‘E-shaksha’ என்ற செயலியை அறிமுகம் செய்து, புலனாய்வு சம்பந்தமாக அந்ததந்த டிஎஸ்பிக்கள் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை கடத்தப்பட்ட தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி தர்மராஜ் மைக்கில் (வாக்கி டாக்கி) அலர்ட் செய்தார். இதையடுத்து வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என நான்கு மாவட்ட போலீசார் தங்கள் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குழந்தை யோகேஷை கடத்திச் சென்றவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் மாதானூர் அருகில் உல்லி ஜங்ஷன் பகுதியில் உள்ள தேவிகாபுரம் கோயில் முன்பு குழந்தையை இறக்கிவிட்டு தப்பித்துவிட்டனர். அப்போது அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், இதுதொடர்பாக போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட போலீசார், பொதுமக்கள் சொன்ன இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டு, குடியாத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
மற்றொருபக்கம், குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார்? அந்த கார் எங்குள்ளது? என விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீஸார்.
அப்போது போலூர் ஜஞ்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் கடந்து செல்வதாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து, திருவண்ணாமலை போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அந்த கார் குழந்தையை கடத்திய கார் இல்லை என தெரியவந்தது.
குழந்தையை கடத்தியது மாருதி சுசுகி சியாஸ் கார் (பதிவெண், KA03 MA0143). ஆனால் போலீசார் துரத்திச் சென்று நிறுத்தியது மாருதி ஷிப்ட் கார். எனவே இந்த காரிலிருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு, அனுப்பிவைத்துவிட்டனர்.
KA 03 MA0143 பதிவெண்… கர்நாடகா மாநிலம் யலகன்கா ஆர்டிஓ ஆபிஸில் 1997ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஃபியட் யுனோ காருடையது என கண்டறியப்பட்டது. எனவே குழந்தையை கடத்தியவர்கள் திட்டமிட்டு நம்பர் ப்ளேட்டை மாற்றி குழந்தையை கடத்தியிருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதனால் இந்த 4 மாவட்டங்களில் மாருதி சியாஸ் ரக கார்களை கண்காணித்து சோதனையிட்டு அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து குழந்தையின் அப்பாவான வேணுவிடமும், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் சந்தேகிப்பதாக சில பேரை கூறியிருக்கிறார்.
மேலும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 29) என்பவரை எஸ்.பி மயில்வானன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

குழந்தை கட்டத்தப்பட்டது ஏன்?
விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, பாலாஜி சொந்தமாக கார் வைத்து டிராவலர்ஸ் நடத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கார் விபத்துக்குள்ளாகி பல லட்சம் செலவு ஏற்பட்டு கடன்சுமை அதிகரித்துள்ளது. இதனையடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுனராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுவனின் தந்தை வேணுவின் சகோதரி காதல் திருமணம் செய்து கொண்டதற்கு பாலாஜி உதவி செய்துள்ளார். இதனால் பாலாஜிக்கும் வேணுவுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருவரின் வீடும் அருகருகே இருந்ததும் இவர்களின் மோதலுக்கு மற்றொரு முக்கிய காரணம்.
இந்த நிலையில் தான் கடன் பிரச்சனையால் தவித்த பாலாஜி, வேணு குடும்பத்தாரிடமிருந்து பணம் பறிக்க திட்டமிட்டு, கார் ஓட்டுநர் விக்ரம் என்பருடன் சேர்ந்து பல நாட்கள் நோட்டமிட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக தான் ஆட்களை அமர்த்தி, போலீசாரை திசை திருப்பும் விதமாக காரின் நம்பர் பிளேட்டை மாற்றி என பல வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நேற்று குழந்தையை கடத்தியுள்ளார் பாலாஜி. குழந்தையை வைத்து வேணுவிடம் பணம் பறிக்கலாம் என்பது தான் அவர் திட்டம்
ஆனால் வேணுவின் வீட்டருகில் சிசிடிவி கேமிரா இருந்ததை கண்டறியாதது அவர் சிக்கியதற்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது.
சிறுவனை கடத்திச் சென்ற காட்சிகள் வீடியோ ஆதாரத்துடன் தொலைக்காட்சி செய்திகளில் வெளியானதும், எப்படியும் சிக்கிக் கொள்வோம் என பதறிய பாலாஜி, ஆம்பூர் அருகே தேவிகாபுரம் பகுதியில் குழந்தையை இறக்கி விட்டுள்ளார்.
அதோடு, அவரே குழந்தை இங்கு உள்ளது போல் வேணுவின் குடும்பத்தாருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.
குழந்தை கிடைத்ததில் வேணுவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், மறுபுறம் குழந்தையை கடத்தியது பாலாஜியாக இருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குழந்தை கடத்தலுக்கான பின்னணி தெரியவந்துள்ளது.
குழந்தை கடத்தலுக்கு உதவிய கார் ஓட்டுநர் விக்ரம் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் விரைந்து குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதே வேளையில் வீட்டருகே இருந்த நபரே குழந்தையை கடத்திய சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
