இந்திய நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் நிகழ்வாக மாறி வருகிறது.
இந்நிலையில், வரும் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் “நாடாளுமன்றத்தை தகர்ப்போம்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் “டெல்லி கலிஸ்தான் ஆகிவிடும்” (Delhi will become Khalistan) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்சல் குருவின் நினைவாக இது நடைபெறும் என்றும், “கலிஸ்தான் தேசிய இராணுவம்” என்ற பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் பிப்ரவரி 13 அன்று மதியம் 1:11 மணிக்கு நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதுவரை எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இது வெறும் மிரட்டலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் பாதுகாப்பு அமைப்புகள் உயர் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லி வாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
