கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (நவம்பர் 14) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், விமான நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள், திரைக்கலைஞர் தொடர்புடைய இடங்கள், பத்திரிகை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது வெடி குண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு அறையாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் பிரதான கட்டடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சோதனை நடைபெற்றது. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் 9 வது முறையாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மணிக்கூண்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ – மெயில் மூலம் நேற்று இரவு தகவல் வந்தது. இதை அடுத்து உக்கடம் போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவினர் அங்கு சென்று மோப்பநாய், மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை பயன்படுத்தி நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
